
சென்னை,
வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர் விசாரணை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு 1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்கனவே 1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கியதுடன், கூடுதலாக அப்பகுதி மக்களுக்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்காக 8 கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மீதம் உள்ள இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்தியதுடன், பயனாளிகள் குறித்த விவரங்களை சேலம் மாவட்ட கலெக்டரிடம் வழங்குபடி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக சட்டப்போராட்டம் நடத்தி வரும் 'விடியல்' என்ற அமைப்பிற்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான விவரங்களை சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட கலெக்டர்களிடம் வழங்கியதாக 'விடியல்' அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும், இழப்பீடு நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு தரப்பில் கடிதம் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் பாக்கி தொகையை வழங்குவதற்கு 3 வாரம் அவகாசம் வழங்குமாறு தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3 வாரங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீதம் உள்ள இழப்பீட்டு தொகையை வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, இழப்பீடு வழங்கியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கின் விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.