வீண் பிடிவாதம்

2 months ago 7

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மாநிலங்களின் நிர்வாகத்தில் தலையிடுவதும், மாநிலத்திற்கென வகுக்கப்பட்டுள்ள உரிமைகளை மெல்ல பறிப்பதுமாக உள்ளது. கல்வித்துறை, உள்ளாட்சி நிர்வாகம், மின்சாரம் என பெரும்பாலான துறைகளில் தலையிட்டு மறைமுகமாக மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்த ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. தன்னுடைய கொள்கைகள், திட்டங்களை மாநிலங்களில் புகுத்தி, மாநில அரசுகளின் உரிமைகளை பறித்து டெல்லியில் இருந்துகொண்டு நாடு முழுவதும் நாட்டாமை வேலை பார்ப்பது என்பதுதான் ஒன்றிய அரசின் பிரதான திட்டமாக இருந்து வருகிறது.

இந்த அடிப்படையில்தான் மும்மொழி கொள்கை திட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டினை வஞ்சிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது தமிழ்நாட்டின் தாய்மொழியான தமிழ், இணைப்பு மொழியான ஆங்கிலம் ஆகிய 2 மொழிகள் மட்டுமே கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்நாட்டில் மூன்றாவதாக ஒரு விருப்ப மொழி என்ற பெயரில் இந்தியை மறைமுகமாக ஏற்றுக்கொள்ளச் செய்வதும், அதற்கு வசதியாக தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தி அதன் மூலம் தன்னுடைய திட்டத்தை நிறைவேற்றவும் ஒன்றிய அரசு துடித்து வருகிறது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஏற்கனவே பலமுறை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளும் வரை சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை விடுவிக்க முடியாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்கமாக அறிவித்திருப்பதோடு, மாணவர்களின் கல்வியை வைத்து ஒன்றிய அரசு அரசியல் செய்ய தொடங்கி உள்ளது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையானது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பேரிடர் மேலாண்மை நிதி, ஜிஎஸ்டி பங்களிப்பு என தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதிகளை கூட ஒதுக்காமல், பாஜ ஆளும் மாநிலங்களுக்கு 3 மடங்காக வாரி வழங்கி வரும் நிலையில், தற்போது கல்வி நிதியை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள நிர்பந்தம் செய்து வருகிறது.

மும்மொழி கொள்கை என்ற பெயரில் விருப்ப மொழி என்ற வழக்கமான வார்த்தை ஜாலங்களை கூறினாலும் இந்தியை மறைமுகமாக உள்ளே புகுத்துவதுதான் ஒன்றிய அரசின் திட்டம் என்பது தமிழ்நாட்டு மக்கள் தெளிவாகவே அறிந்து வைத்துள்ளனர். இந்தி உள்பட ஒரு மொழியை விரும்பி படிப்பதற்கும், வலுக்கட்டாயமாக திணிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவர். ஏற்கனவே இந்தி எதிர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு பல போராட்ட களங்களை கண்ட மண். பாஜ தவிர திராவிட கட்சிகள் மட்டுமல்லாது மற்ற பெரும்பாலான கட்சிகளும் இன்றைக்கும் இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான நிலைப்பாட்டினையே கொண்டுள்ளன.

இதை ஒன்றிய அரசு நன்கு அறிந்துள்ள போதிலும் தொடர்ந்து தமிழ்நாட்டு நலனுக்கு எதிரான மக்களின் மனநிலைக்கு மாறான நடவடிக்கைகளையே தொடர்ந்து எடுத்து வருகின்றது. மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து விரிவாகவும், தெளிவாகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் விளக்கியுள்ளார். ஆனால் அதை ஏற்காமல் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியிருக்கிறார். இவ்வாறு தமிழ்நாடு அரசை ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்வது வீண் பிடிவாதமே.

The post வீண் பிடிவாதம் appeared first on Dinakaran.

Read Entire Article