*ஆவணங்களை பார்வையிட்டார்
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்ட நகர்ப்புற பகுதிகளில் வீட்டு மனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் நேரு நகர், எம்.ஜி.ஆர் நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில், வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற பகுதிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக, வீடு கட்டி வாழும் மக்களுக்கு, அவர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டிற்காக அரசின் சில வரை முறைகளுக்கு உட்பட்டு, பட்டா வழங்கிட அறிவுறுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில், வடக்கு மாதவி ஊராட்சிக்குட்பட்ட நேரு நகர் பகுதியில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 11 நபர்களும், எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள 83 நபர்களும், இந்திரா நகர் பகுதியில் 36 நபர்களும் அரசின் விதிகளுக்குட்பட்டு தகுதியுடையவர்களா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆவணங்களை பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், குடியிருப்புவாசிகளிடம், நீண்ட வருடங்களாக வசிப்பதற்கான வீட்டு வரி ரசீது, மின் இணைப்பு ரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வருமான வரம்பு உள்ளிட்ட ஆவணங்களை சரி பார்த்து ஆய்வுசெய்து, கூரை வீடு மற்றும் ஆஸ்பெட்டாஸ் அட்டை வீடுகளில் வசித்து வரும் நபர்களுக்கு பட்டா வழங்கப் பெற்றதற்கு பின்னர் ஊராட்சியின் மூலமாக கலைஞரின் கனவு இல்லம் அல்லது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து தருமாறு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்டக் கலெக்டர் அறிவுறுத்தினார்.
மேலும் வடக்குமாதவி ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகரில் கல் உடைக்கும் தொழில் செய்து வரும் தொழிலாளர்களிடம் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து மாவட்டக் கலெக்டர் கேட்டறிந்து, குழந்தைகளை கட்டாயமாக படிக்க வைத்திட வேண்டும், படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அரசின் மூலமாக இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அதனை முழுமையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் வீட்டு மனைப் பட்டா வழங்குவது தொடர்பாக ஆவணங்கள் சரியாக உள்ளவர்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வீட்டுமனை வரன் முறைப் படுத்தி, நகர்ப்புற பகுதிகளில் வீட்டு மனை வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் விரைவில் பட்டா வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, வருவாய் கோட்டாட்சியர் (பொ) வைத்தியநாதன், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சொர்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுந்தர ராமன், பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்ர மணியன், பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வக்குமார், இமயவர்மன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
The post வீட்டுமனை பட்டா வழங்குவது தொடர்பாக பயனாளிகளின் வீடுகளுக்கே கலெக்டர் நேரில் சென்று ஆய்வு appeared first on Dinakaran.