வீட்டுக்கு வெள்ளையடிக்கப் போறீங்களா?…

1 week ago 3

கோலாகலமாக தீபாவளி முடிந்துவிட்டது, தொடர்ந்து கார்த்திகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் எனப் பண்டிகைகள் வரிசையாக அணிவகுத்து நிற்கும் காலம் இது. ஒரு சிலர் பொங்கலுக்கும் மற்றும் சிலர் புது வருடம் பிறந்தால் வீடுகளுக்கு வெள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். மேலும் முன்பெல்லாம் வீட்டு உறுப்பினர்களே ஒன்றிணைந்து சுவருக்குச் சுண்ணாம்பு பூசி, வண்ணம் தீட்டுவார்கள். அதில் கிடைக்கும் மனநிறைவும், மகிழ்ச்சியும் அலாதியானது. இரண்டு நாட்கள் வீட்டில் சமையல் எதுவும் இல்லாமல், குழந்தைகள், பெரியவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து இந்த வெள்ளையடிக்கும் பணியைச் செய்வார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லாமே கார்பரேட் வசம் சென்று விட்டதால் அனைத்து வேலைகளுக்குமே ஆட்கள், எல்லாமே புக்கிங் முறைதான். சரி குறைந்தபட்சம் என்ன நிறம், எப்படி வண்ணப் பூச்சு என்கிற கலந்துரையாடலேனும் செய்யுங்கள். வீட்டுக்கு பெயின்ட் அடிக்கும் போது என்ன வண்ண பெயின்ட் அடிக்கலாம் என்று யோசிப்பவர்கள், பெயின்டின் வேதித் தன்மைகள் குறித்து யோசிப்பதில்லை. ஆனால் அது குறித்து யோசிப்பதும், கேட்டு தெரிந்து கொள்வதும் முக்கியம். வீட்டில் நாம் அடிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் பெயின்ட், நச்சுத்தன்மை இல்லாத ஆர்கானிக் சேர்மங்கள் கொண்ட பெயின்டாக இருக்க வேண்டும்.

நிறம் தேர்வு

வீட்டில் அதிக நேரம் செலவிடும் அம்மா, மனைவி அல்லது பெரியவர்கள் என அவர்களின் சாய்ஸில் வீட்டுக்கு நிறம் தேர்வு செய்வது அவசியம். மேலும் உங்களுக்கும் அந்த நிறம் பிடித்திருப்பதாக பார்த்துக்கொள்ளுங்கள். இங்கே பிடித்த நிறம் என்பதைக் கடந்து மகிழ்ச்சியான நிறம் என்னும் தேர்வு அவசியம். அதாவது வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் பிடித்தமான ஒரு பொதுவான நிறம் அதில் பெரும்பான்மை வீட்டில் இருப்போரின் பிடித்த நிறமாக தேர்வு செய்ய வேண்டும். காரணம் பகல் முழுக்க வெளியில் இருப்போருக்கு வீட்டில் அடையும் போது மகிழ்ச்சியும், நிம்மதியும் கொடுப்பது வீட்டில் இருக்கும் குடும்பம் தான் என்கையில், அவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் பிடித்தமான சூழலில் இருந்தால்தான் அவர்கள் மகிழ்வாக உங்களை மாலை வேளையில் வரவேற்பார்கள். பெரும்பாலும் சந்தனம், மஞ்சள், வெள்ளை, இளம் ஊதா, இளம் பச்சை போன்ற நிறங்கள் வீட்டுக்குப் பளிச் லுக் கொடுக்கும். மேலும் கீழ்த்தளம், முதல் தளம் நமக்கு மேலும் சுற்றிலும் கூட வீடுகள் இருப்பின் என்னதான் மின் விளக்குகள் பயன்படுத்தினாலும் வெளிச்சம் குறைவாகவே இருக்கும். அதனால்தான் பளிச் நிறங்கள் அவசியம். அதீத வாசனை இல்லாத, அதே சமயம் எளிதில் ஆவியாகும் பூச்சுகள் அவசியம். இல்லையேல் பெயின்ட் வாசனை போகும் வரை தலைவலி, குமட்டல், தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் வரலாம். அதே போல் எந்த அறைக்கு என்ன நிறம் என்பதிலும் நிச்சயம் தெளிவு வேண்டும். உங்களின் தனியறை எனில் உங்களுக்குப் பிடித்த நிறத்தில் பெயின்ட் அடிக்கலாம்.

வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் முன்…

கூடுதல் பணம் செலவழித்தாலும் எப்போதும் நல்ல தரமான, நல்ல பிராண்ட் பெயின்ட்களை வாங்கவும். பெயின்ட் அடிப்பதற்கு முன், சுவர்களில் நீர்-எதிர்ப்பு பொருட்களை பயன்படுத்த மறக்காதீர்கள், ஏனெனில் இது சுவற்றில் இருந்து கசிவு அல்லது ஈரப்பதம் ஆகாமல் தடுக்கிறது. அறைகள் எவ்வளவு இயற்கை ஒளியைப் பெறுகின்றன என்பதைப் பொறுத்து பெயின்டுகளைத் தேர்ந்தெடுக்கவும். வெளிப்புறத்திற்கு பெரும்பாலும் வெள்ளை நிறத்தின் அடிப்படையிலான நிற ஷேட்களை பயன்படுத்துங்கள், இந்தியாவைப் பொருத்தவரை மூன்று மாதங்கள்தான் மழை, குளிர், மற்ற நாட்கள் எல்லாமே சுட்டெரிக்கும் வெயில் தான் என்பதால் வெப்பத்தை ஈர்க்காத நிறங்களின் தேர்வு அவசியம். பெயின்ட் அடிக்க ஒருவேளை பணியாளர்களை நியமிக்க இருக்கிறீர்கள் எனில் ஒரு நான்கைந்து இடங்களில் அதன் பட்ஜெட் குறித்து கேளுங்கள், மேலும் ஆன்லைனிலும் எங்கே குறைந்த மற்றும் தரமான வகையில் வெள்ளை அடிக்கின்றனர் என்னும் ஆலோசனைப் பெறுவதும் அவசியம். வெள்ளையடிக்கும் நாட்களில் பெரும்பாலும் வெளியில் உணவுகள் வாங்கிக்கொள்வது நல்லது. ஏனெனில் பெயின்ட் வாசனை அல்லது அதன் காற்று பட்டு உணவுப் பொருட்கள் நிச்சயம் வேதியியல் மாற்றங்கள் அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வெள்ளையடிக்கும் பணியாளர்களுக்கு வீட்டின் அறைகள், பொருட்கள் குறித்த வழிகள் காட்ட வீட்டுக்கு ஒருத்தரை மட்டும் நியமியுங்கள். ஏனெனில் ஆளாளுக்கு ஆலோசனைகள், கேள்விகள் எனக் கேட்கும் பட்சத்தில் பணியாளர்கள் நிச்சயம் எரிச்சலடையக் கூடும். அது அவர்களின் வேலையை இடையூறு செய்வதுடன் நேரத்தையும் அதிகரித்து நமக்கான
செலவையும் கூட்டிவிடும்.

வெள்ளையடித்தபின்

பெயின்ட் அடித்து சுமார் 24 மணி நேரங்கள் ஜன்னல்களை திறந்து வைத்திருந்து பின்னர் பொருட்களை மீண்டும் அடுக்குங்கள். ஏனெனில் பெயின்ட் வாசனை மற்றும் ஈரம் காய கால அவகாசம் தேவை. வீட்டில் அதிகம் இருப்போருக்கு தெரிந்தபடி பொருட்களை மீண்டும் அடுக்குவது நல்லது. அவரவர் அறைகளை அவர்களே அடுக்குவதும் சிறந்தது. எல்லா வேலைகளும் பெண்கள்தான் செய்ய வேண்டுமென்றில்லை. வீட்டின் ஆண்கள், குழந்தைகளும் கூட அவரவர் பலத்திற்கு ஏற்ப வேலைகளை பகிர்ந்து வீட்டின் பொருட்களை மீண்டும் அடுக்கி வைக்கலாம். போலவே வெள்ளையடித்த மறுநாளும் முடிந்தால் கடைகளில் அல்லது உறவினர் உதவியுடன் வெளிப்புற உணவு எடுத்துக்கொள்வதால் வீட்டை மீண்டும் சீர் செய்யும் பணிகள் முழுமையாகும்.
– அ.ப.ஜெயபால்.

 

The post வீட்டுக்கு வெள்ளையடிக்கப் போறீங்களா?… appeared first on Dinakaran.

Read Entire Article