சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரியக் குடியிருப்புகளில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்றும் இதை திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மக்களை சிந்திக்க விடாமல் போதையிலேயே வைத்திருந்தால் ஆண்டாண்டு காலம் நாமே ஆளலாம் என்ற நப்பாசையில் முதலமைச்சர் ஸ்டாலினின் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்று சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் உண்மையோ என்று எண்ணத் தோன்றுகிறது. யார் என்ன தொழில் செய்தாலும் பரவாயில்லை, தங்களின் சொந்த கஜானா நிரம்ப வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்படுவதால் தமிழகமெங்கும் போதைப்பொருட்கள் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. பெரும்பாலான நிகழ்வுகளில் ஆளும் கட்சியினரே ஈடுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.