திருமலை: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை குடிபோதையில் பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், ஐதராபாத் மோதி நகரைச் சேர்ந்தவர் சிவா(33). இவர் ஜூபிலி ஹில்ஸ் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குநரிடம் கார் டிரைவராக உள்ளார்.அப்பகுதியில் உள்ள தனியார் அலுவலகத்தில் 45 வயதுள்ள பெண் ஒருவர் வாட்ச்மேனாக வேலை செய்து வருகிறார். அந்த பெண்ணிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட சிவா, அக்கா என அழைத்து பழகி வந்தார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவரிடமும் சிவா பழகினார். இந்த பழக்கத்தின் அடிப்படையில் சிவா, அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது அந்த பெண்ணின் கணவருடன் சேர்ந்து வீட்டிலேயே மது குடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் வாட்ச்மேன் வேலை பார்க்கும் பெண், ஆன்மிக பயணம் சென்றுவிட்டார். அவரது கணவரும் அன்றிரவு வீட்டுக்கு வரவில்லை. இவர்களது 18 வயதுள்ள பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த சிவா அன்றிரவு 8 மணிக்கு மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இளம்பெண், வீட்டில் அப்பா இல்லை எனக்கூறி அவரை அனுப்பிவிட்டார். ஆனால் இரவு 12 மணியளவில் மீண்டும் அங்கு வந்த சிவா, கதவை தட்டியுள்ளார். அப்பாதான் வந்திருப்பார் எனக்கருதிய இளம்பெண் கதவை திறந்தார். அங்கு சிவா நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண், கதவை மூட முயன்றார். ஆனால் சிவா, வலுக்கட்டாயமாக கதவை திறந்துகொண்டு உள்ளே புகுந்துள்ளார்.
அப்போது இளம்பெண் கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவா, இளம்பெண்ணின் வாயை தலையணையால் மூடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண், நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஜூபிலி ஹில்ஸ் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவாவை தேடி வந்தனர். இன்று காலை அப்பகுதியில் பதுங்கியிருந்த சிவாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம்; கார் டிரைவர் கைது appeared first on Dinakaran.