வீடியோ காலில் பேசியதை ஸ்கிரின் ஷாட் எடுத்து மிரட்டல்: விபத்தில் இறந்த கணவரின் காப்பீட்டு பணம் 10 லட்சம் பறிப்பு; தம்பதி கைது

5 hours ago 1

திருவொற்றியூர்: சென்னை எண்ணூர் முகத்துவாரகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (33). இவர் மீனவர். இவரது மனைவி சரண்யா (30). இவர்களுக்கு 2 மகன்கள். சில வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் சதீஷ் உயிரிழந்ததால் விபத்து காப்பீட்டில் வந்த தொகையை வைத்து சரண்யா தனது மகன்களை கவனித்து வந்துள்ளார். மேலும் குடும்ப செலவுக்கு துணி வியாபாரம் செய்துள்ளார். அப்போது தனது பகுதியை சேர்ந்த தம்பதி காந்திகுமார் (35), சத்தியராணி (33) ஆகியோருடன் சரண்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், சரண்யாவிடம் இருந்து சத்தியராணி கொஞ்சம், கொஞ்சமாக 10 லட்சம் வரை பெற்றுள்ளார். இதன்பிறகு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அவரது கணவர் காந்திகுமாரிடம் சென்று சரண்யா தனது பணத்தை கேட்டுள்ளார். அதற்கு காந்திகுமார், ‘’ என் மனைவியிடம் பணம் கேட்க வேண்டாம்’ நானே தந்துவிடுகிறேன்’ என்று கூறியதாக தெரிகிறது. இதன்பிறகு பணம் விஷயமாக காந்திகுமார் அடிக்கடி சரண்யாவிடம் பேசியுள்ளார். மேலும் வீடியோ காலில் சென்று சரண்யாவிடம் அன்பாக பேசி தனது வலையில் வீழ்த்த முயன்றதால் சுதாரித்துக்கொண்ட சரண்யா, ‘’எனக்கு அடிக்கடி போன் செய்ய வேண்டாம், பணத்தை கொடுங்கள்’’ என்று கறாராக கேட்டதுடன் பணம் தரவில்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் செய்வேன்’’ என எச்சரித்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த காந்திகுமார், சரண்யாவுடன் வீடியோ காலில் பேசிய ஸ்கிரின்ஷாட் போட்டோவை சரண்யாவிடம் காட்டி, ‘’பணத்தை கேட்டால், இந்த போட்டோவை சமூக வலைத்தள பக்கத்தில் போட்டு உனக்கும் எனக்கும் கள்ளத் தொடர்ப்பு இருப்பதாக கூறி அசிங்கப்படுத்திவிடுவேன்’’ என்று மிரட்டியுள்ளார். இதுசம்பந்தமாக சரண்யா கொடுத்த புகாரின்படி, எண்ணூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி காந்திகுமார், சத்தியராணி ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post வீடியோ காலில் பேசியதை ஸ்கிரின் ஷாட் எடுத்து மிரட்டல்: விபத்தில் இறந்த கணவரின் காப்பீட்டு பணம் 10 லட்சம் பறிப்பு; தம்பதி கைது appeared first on Dinakaran.

Read Entire Article