சென்னை,
பிரதமர் மோடி அறிவித்த பிரதம மந்திரியின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும். 18 வகையான பாரம்பரிய தொழில்களுக்காக P.M விஸ்வகர்மா திட்டம் என்ற புதிய திட்டத்தை 2023 செப்டம்பர் 17 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார்.
இந்த திட்டம் இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு பலனளிக்கும் திட்டமாக கொண்டுவரப்பட்டது. நாட்டில் இருக்கும் பிற மாநிலங்கள் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால் இத்திட்டத்தை தமிழகத்தில் இதுவரை தமிழக அரசு அமல்படுத்ததால் லட்சக்கணக்கான பாரம்பரிய கைவினை தொழிலாளர்கள் இத்திட்டத்தின் பலனை பெறமுடியாமல் தவிக்கின்றார்கள். அதனால் இத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.