விவாகரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது; மவுனமாக இருப்பதால் என்னை மோசமானவளாக சித்தரிப்பதா?: ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஆவேசம்

3 months ago 22

சென்னை: ‘பொதுவெளியில் எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், என்னைப் பற்றியும் தவறாகப் பேசி வருவதை அறிந்து நான் அமைதி காப்பது என் பலவீனம் அல்ல’ என்று, நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி நேற்று மாலை ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2 மகன்களுக்கு தந்தையான ஜெயம் ரவி, திடீரென்று தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதையடுத்து அவர்களைப் பற்றிய பல்வேறு தகவல்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். ஜெயம் ரவி கடந்த மாதம் 9ம் தேதி அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில், விவாகரத்து முடிவை ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்துள்ளார் என்றும், அது தனது ஒப்புதல் இல்லாமல் அவராகவே எடுத்தது என்றும் பதிலளித்தார். இதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, ‘ஆர்த்திக்கு ஏற்கனவே 2 முறை விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேன். ஆனால் அவர், விவாகரத்து விஷயமே தனக்கு தெரியாது என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார்.

மேலும் ஜெயம் ரவி, ‘பின்னணி பாடகி ஒருவருடன் என்னை தொடர்புப்படுத்தி பேசுகிறார்கள். அவர் பாடகி என்பதை தாண்டி ஒரு சைக்காலஜிஸ்ட். பல உயிர்களைக் காப்பாற்றி இருக்கிறார். நாங்கள் இருவரும் சேர்ந்து இலவசமாக சேவை செய்ய ஸ்பிரிச்சுவல் சென்டர் மாதிரி ஒன்றை தொடங்கலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். எனவே, அந்த பெண்ணைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள்’ என்றார். இதை தொடர்ந்து, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் ஆர்த்தி வீட்டிலுள்ள தனது உடைமைகளை திரும்ப அளிக்கும்படி, சென்னை அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் ஆர்த்தி மீது ஜெயம் ரவி புகார் அளித்தார். இதையடுத்து இந்த விவாகரத்து விஷயம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது ஆர்த்தி ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:
எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தைப் பற்றி பலர் பேசி வருகின்றனர். எனது மவுனம் பலவீனமோ, குற்ற உணர்வின் அடையாளமோ அல்ல என்பதை இங்கு வலியுறுத்துகிறேன். நான் கண்ணியமாக இருப்பதால், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாகச் சித்தரிக்க முயற்சி செய்பவர்களுக்குத்தான் இந்த அறிக்கை. சட்டத்தின் அடிப்படையில் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு விவாகரத்து குறித்து அறிக்கையில் நான் சொன்ன வார்த்தைகள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இந்த விவாகரத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. நான் தனிப்பட்ட முறையில் ஜெயம் ரவியை சந்தித்துப் பேச அனுமதி கேட்டும் இதுநாள்வரை அனுமதி கிடைக்கவில்லை. விவாகரத்து விஷயத்தில் அவருடன் நான் தனிப்பட்ட முறையில் பேச காத்திருக்கிறேன். நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்க்கையில் இருக்கிறது. கடவுள் என்றும் எனக்கு துணை இருப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் ஆர்த்தி கூறியுள்ளார். இப்போதும் அவர் தனது பெயரை ‘ஆர்த்தி ரவி’ என்றே குறிப்பிட்டுள்ளார்.

The post விவாகரத்து விவகாரம் விஸ்வரூபம் எடுக்கிறது; மவுனமாக இருப்பதால் என்னை மோசமானவளாக சித்தரிப்பதா?: ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Read Entire Article