சென்னை,
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமண பதிவை ரத்து செய்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி ஜெயம் ரவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதனையடுத்து, விவாகரத்து கோரி ஜெயம் ரவி தொடர்ந்த மனு மீதான விசாரணை சென்னை குடும்ப நல கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, 2 முறை நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜராகி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் சமரச தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்று அந்த வழக்கு குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. ஜெயம் ரவி - ஆர்த்தி இருவரும் நீதிபதி முன் ஆஜரானநிலையில், இன்னும் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இருவரையும் மனம் விட்டு பேசும்படி உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை ஜனவரி 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.