திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டன்பாளையம் பகுதியில் கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்டனர். மாவட்ட காவல்துறை சார்பில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பிஏபி வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகள் சார்பில் திருப்பூர் பல்லடம் சாலை வித்தியாலயம் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நேற்று விவசாயிகள் தற்காப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முன்னதாக இந்த பேரணியில் விவசாயிகள் வேல் கம்பு மற்றும் குத்தி எடுத்து வர காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் எடுத்து வர காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. அதன் காரணமாக விழிப்புணர்வு பேரணியாக நேற்று நடைபெற்றது. கருப்பசாமி வேடமணிந்த நபர் கருப்புசாமி பாடலுக்கு நடனமாடியபடி பேரணியில் பங்கேற்றனர்.
தொடர்ந்து கருப்புசாமி பாடல் ஒளிபரப்பவும் சாலையில் நடனமாடுவதற்கும் காவல்துறையினர் கட்டுப்பாடு விதித்ததால் விவசாய அமைப்பினருக்கும் காவல்துறையினருக்கும் சிறு வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து பாடல் நிறுத்தப்பட்டு திருடர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், விவசாயிகள் தற்காப்பிற்கு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் என கோசங்கள் எழுப்பியவாறு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் நிறைவடைந்தது. விவசாயிகள் பேரணியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பேரணியில் கலந்து கொண்டு பேட்டியளித்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவர் ஈசன் கூறுகையில், ‘‘திருப்பூர், ஈரோடு, தேனி உள்ளிட்ட பகுதிகளில் தோட்டத்து வீடுகளில் வசிக்கும் விவசாயிகள் நோட்டமிடப்பட்டு பிறகு இரவு நேரத்தில் கொலை செய்யப்பட்டு நகை பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க விவசாயிகள் தற்காப்பிற்காக வேல் கம்பு, குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும்.
இதனைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி கிராமங்கள் தோறும் வழங்க உள்ளோம். இதன் மூலம் விவசாயிகள் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும். ஒருபோதும் அதனை தவறாக பயன்படுத்த மாட்டோம். அதே நேரத்தில் பல்லடம் விவசாயி குடும்பத்தினர் கொலை வழக்கில் காவல்துறை செயல்பாடு சிறப்பாக உள்ளது. இருப்பினும் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’’ என்றார்.
காவல்துறை நடவடிக்கை
பல்லடம் சேமலை கவுண்டன்பாளையத்தில் தெய்வசிகாமணி அவரது மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 14 தனி படைகள் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் 2011ம் ஆண்டு முதல் ஆதாய கொலை வழக்கில் தொடர்புடையவர்கள், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 856 பேரின் பட்டியல் சேகரித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, சைபர் கிரைம் போலீசார் மூலம் அப்பகுதியில் வந்து சென்றவர்களின் தொலைபேசி எண்களை வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் போலீசார் சார்பில் பல்வேறு கிராமப் பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதோடு விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post விவசாயிகளின் தற்காப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.