புதுடெல்லி:
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்கவேண்டும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி, பஞ்சாப் - அரியானா எல்லையான கனவுரியில் பஞ்சாப் விவசாய சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் (வயது 70) காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
புற்று நோயாளியான தலேவால கடந்த மாதம் 26-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூறியிருக்கிறார். அவரது உடல்நிலை மோசமடைந்த போதிலும் சிகிச்சைககு மறுத்து போராட்டத்தை தொடர்கிறார்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கை தொடர்பான வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி ஜக்ஜித் சிங் தலேவால் மற்றும் பிற விவசாயிகளை தொடர்ச்சியாக சந்தித்து பேசியதாகவும், ஆனால் சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவுடன் தொடர்பு கொள்ள அவர்கள் மறுத்துவிட்டனர் என்றும் பஞ்சாப் அரசு வழக்கறிஞர் குர்மீந்தர் சிங் தெரிவித்தார்.
விவசாயிகளை சமாதானம் செய்ய மாநில அரசு தினமும் முயற்சி செய்வதாக கூறிய அவர், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக கோர்ட்டில் சமர்ப்பிக்க அனுமதிக்கலாம் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், "விவசாயிகள் நேரடியாகவோ அல்லது அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ ஆலோசனை அல்லது கோரிக்கைகளை கூறுவதற்காக நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்" என்றனர்.
மேலும், உண்ணாவிரதம் இருக்கும் தலேவாலின் உடல்நிலையை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், பஞ்சாப் அரசாங்கம் தாமதமின்றி மருத்துவ உதவிகளை வழங்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.