பஹ்ரைன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இடிந்தகரை மீனவா்கள் இந்தியா புறப்பட்டனர்

2 hours ago 2

திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை பகுதியைச் சோ்ந்த 28 மீனவா்கள், பஹ்ரைன் கடல்பகுதி அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தகவல் இந்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பின் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் அவர்களின் தண்டனையை குறைத்து தாயகம் அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் பலனாக மீனவர்களின் தண்டனை 3 மாதமாக குறைக்கப்பட்டு, கடந்த 10-ம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து அவா்களை இந்தியாவிற்கு அழைத்து வர வெளியுறவுத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அனைவரும் பஹ்ரைனிலிருந்து இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சிறைத்தண்டனை 6 மாதத்திலிருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டு சமீபத்தில் விடுதலை செய்யப்பட்ட 28 மீனவர்கள் தாயகம் திரும்புகிறார்கள் என்பதை அறிவிப்பதில் தூதரகம் மகிழ்ச்சி அடைகிறது. இந்திய அரசின் இந்திய சமூக நல நிதியின் கீழ் அவர்களுக்கான சட்ட உதவி மற்றும் பயண ஏற்பாடுகளை தூதரகம் வழங்கியது. இந்திய குடிமக்களின் நலனே எங்கள் முன்னுரிமை.

மீனவர்கள் விஷயத்தில் விரைவான நடவடிக்கை எடுத்த பஹ்ரைன் அதிகாரிகளுக்கு நன்றி. மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தாயகம் திரும்பி குடும்பத்தினருடன் சேர வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article