கோவை: இந்தியாவின் பொருளாதாரம் 2047-ல் 30 டிரில்லியன் டாலரை எட்டும் எனவும், அதனை அடைய கல்வி நிறுவனங்கள் விவசாயிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார். ஊட்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய துணைவேந்தர்களுக்கான மாநாட்டை கடந்த 25ம் தேதி துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். மாநாடு நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஆளுநர் ஆர்.என். ரவி நேற்று காலை 8 மணியளவில் கார் மூலம் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.
முதல் நாள் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, முதுமலை யானைகள் முகாமுக்கு குடும்பத்துடன் சென்ற துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் சுற்றி பார்த்து, ஆஸ்கர் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார். பழங்குடியினர் மக்களையும் சந்தித்து பாரம்பரியம் நடனமாடினார். பின்னர் நேற்று காலை ஹெலிகாப்டர் மூலம் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கோவைக்கு வந்து பின்னர் வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு சென்றார். அங்கு பட்டமளிப்பு விழா அரங்கில் விக்சித் பாரத்திற்கான வேளாண் கல்வி, புதுமை மற்றும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
இதில், துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் பேசியதாவது:
விவசாயிகள் செழிப்பாக இருக்க வேளாண் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் உதவ வேண்டும். விவசாயிகள் வெறும் உற்பத்தியாளராக இல்லாமல் தங்களது விளைபொருட்களை சந்தைப்படுத்த வேண்டும். விவசாயிகள் மதிப்பூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து வர்த்தகர்களாக மாறி தொழில்முனைவோராக வேண்டும். விவசாயத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்தியாவின் உணவு தேவைக்கு முக்கிய பங்களிப்பை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அளித்து வருகிறது.
மொத்த மக்கள் தொகையில் 46 சதவீதம் விவசாயிகள் உள்ளனர். ஆனால், விவசாயம் உள்நாட்டு உற்பத்தியில் 16 சதவீதம் மட்டுமே உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் 2047-ல் 30 டிரில்லியன் டாலர்களாக எட்டுவது என்பது விக்சித் பாரத் நோக்கம். இதனை அடைய கல்வி நிறுவனங்கள் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் தனி விமானம் மூலம் துணை ஜனாதிபதி டெல்லி புறப்பட்டு சென்றார். ஆளுநரும் சென்னைக்கு சென்றார்.
The post விவசாயத்தில் ஆராய்ச்சி, தொழில்நுட்பத்திற்கு முக்கியத்துவம்; இந்திய பொருளாதாரம் 2047-ல் 30 டிரில்லியன் டாலரை எட்டும்: கோவை வேளாண் பல்கலையில் துணை ஜனாதிபதி பேச்சு appeared first on Dinakaran.