விழுப்புரம்: விழுப்புரம் அருகே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விற்பனையாகாததால் தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யப்படாமல் வயலிலேயே வீணாகி வருகிறது. எனவே இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழ வகைகளில் தர்பூசணி பழங்கள் முக்கிய இடத்தில் உள்ளது. அதிக அளவில் மக்கள் தர்பூசணி பழங்களை விரும்பி வாங்கி செல்வார்கள். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் பயிரிடப்படும் இந்த குறுகிய கால தோட்டக்கலை பயிரான தர்பூசணி பழங்கள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
குறிப்பாக கோடை காலங்களில் தர்பூசணிக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்படுவது வழக்கம். அதனை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் தமிழகம் முழுவதும் தர்பூசணி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆண்டு தர்பூசணி பழங்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை ஏற்படுத்திய வதந்தியால் பல ஆயிரக்கணக்கில் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனை ஆகாமல் விவசாய நிலங்களில் வீணாகி வருகின்றன.
தர்பூசணி பழங்களில் ஊசி போட்டு நிற கலப்படம் செய்கின்றனர் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்த தவறான கருத்தால் தர்பூசணி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கிலோ ரூ.15, ரூ.20க்கு விற்ற தர்பூசணி தற்போது கிலோ ரூ.3 ஆக குறைந்துவிட்டது. விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ஏக்கருக்கு தலா ரூ.50 ஆயிரம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதுவும் விளைநிலங்களில் இருந்து கொண்டு வந்து வியாபாரத்துக்கு வைத்துள்ள வியாபாரிகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தர்பூசணி பழங்கள் குறித்த வதந்திகளுக்கு தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்திய போதிலும் வியாபாரிகள் கொள்முதல், பொதுமக்களின் நுகர்வு தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இதனால் விவசாய நிலங்களிலேயே தர்பூசணி பழங்கள் கொள்முதல் செய்யப்படாமல் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வட மாவட்டங்களில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தர்பூசணி விளைச்சல் அமோகமாக இருக்கும். ஆனால் தற்போது இந்த மாவட்டங்களில் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அதில் 50 சதவீதத்துக்கு மேல் விற்பனையாகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். எனவே தோட்டக்கலைத்துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் சுற்றியுள்ள வளவனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அறுவடை செய்யப்படாமல் சுமார் 500 ஏக்கருக்கு மேல் தர்பூசணி பழங்கள் வீணாக விளைநிலங்களில் அழுகி வருகின்றன. இது விவசாயிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post விழுப்புரம் அருகே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயனில்லை விற்பனை ஆகாததால் அறுவடை செய்யாமல் வயலில் வீணாகும் தர்பூசணி பழங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.