சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பவானி கே.சி.கருப்பண்ணன் (அதிமுக) பேசியதாவது: அதிமுக ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, நெசவாளர்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. இன்றைக்கு நீங்கள் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டீர்கள். அதனை குறைக்க வேண்டும். ரன்னிங் லைசென்ஸ் வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கல்குவாரிகளில் அபராதம் போடுகிறார்கள். ரூ.20 கோடி மதிப்புக்கு ரூ.60 கோடி வரை அபராதம் விதிக்கிறார்கள்.
அமைச்சர் துரைமுருகன்: யாருக்கும் அதுபோன்று செய்வதில்லை.
கருப்பண்ணன்: எம் சாண்ட், மணல், ஜல்லி விலை அதிகமாக இருக்கிறது. அதனை குறைக்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். மூலப்பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். வேளாண் கல்லூரி மாணவிகள் வெயிலில் கணக்கெடுக்கிறார்கள். மாணவிகளை வைத்து கணக்கெடுப்பதை நிறுத்த வேண்டும்.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: பொதுவாக வேளாண் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் விளை நிலங்களில் பயிற்சி எடுக்க வேண்டும் என்ற முறை இருக்கிறது. இது டிஜிட்டல் சர்வேதான்.
எஸ்.பி.வேலுமணி: வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த நேரத்தில் மாணவிகளை கணக்கெடுக்க வைக்கலாமா என்று பெற்றோர் கேள்வி கேட்கிறார்கள். அதைத்தான் எங்கள் உறுப்பினர் சுட்டிக்காட்டுகிறார். அரசு ஊழியர்களை வைத்து எடுக்க வேண்டியது தானே.
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: இது தொடர்பாக மாற்று ஏற்பாடுகள் ஆராயப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post விளை நிலங்களில் கணக்கெடுக்கும் பணிக்கு மாற்று ஏற்பாடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் appeared first on Dinakaran.