* காவல்நிலையத்தில் அரசு சுகாதார சேவைகள் இணை இயக்குநர் பரபரப்பு புகார்
சென்னை:பிரபல யூடியூபர் இர்பான் அவரது மனைவியை கடந்த ஜூலை 23ம் தேதி பிரசவத்திற்காக சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. இதற்கிடையே யூடியூபர் இர்பான் கடந்த 19ம் தேதி தனது யூடியூப் சேனலில், தனது மனைவி பிரசவத்தின் போது, உடன் இருப்பது போன்றும், அறுசை சிகிச்சையின் போது மனைவியின் வயிற்றில் இருந்து குழந்தையை ரத்த கறைகளுடன் தனியார் மருத்துவமனை டாக்டர் குழுவினர் வெளியே எடுத்தனர்.
அப்போது யூடியூபர் இர்பான், தேசிய மருத்துவ சட்ட விதிகளுக்கு முரணாக தனது மனைவியின் பிரசவத்தை வீடியோ எடுத்ததும், அதை விட ஒரு படி மேலே சென்று பிரசவம் பார்க்கும் டாக்டர்கள் செய்யும் தாயுக்கும் குழந்தைக்குமான 10 மாத உயிர் இணைப்பான தொப்புள் கொடி இணைப்பை, இர்பான் துண்டிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. சிலர் வாழ்த்துகள் தெரிவித்தாலும், பெரும்பாலானோர் இது மருத்துவ சட்டவிதிகளுக்கு முரணானது என்று கண்டனம் தெரிவித்தனர். இந்த சர்ச்சைக்குரிய வீடியோவை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சில மணி நேரத்திலேயே பார்த்துள்ளனர்.
இதற்கிடையே மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி, யூடியூபர் இர்பான் செய்தது தவறு என்றும், தானாக விளம்பர நோக்கத்திற்காக கேமரா எடுத்து சென்று வீடியோ எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது மருத்துவ விதிகளின் படி தவறானது. எனவே இதுதொடர்பாக சம்பந்தபட்ட தனியார் மருத்துவமனைக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பப்படும். மேலும், பிரசவம் பார்த்த டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மருத்துவ கழகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து பிரச்னை தலைக்குமேல் சென்றதால் யூடியூபர் இர்பான் தனது யூடியூப் சேனலில் இருந்து சர்ச்சையான வீடியோவை நீக்கினார். இருந்தாலும், முறைப்படி மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் நேற்று முன்தினம் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோசிடம் புகார் அளித்தனர்.
புகார் குறித்து போலீசார் கூறுகையில், ‘‘விளம்பர நோக்கில் இர்பான் வீடியோ வெளியிட்டுள்ளார். அறுவை சிகிச்சை அறையில் வெளியாட்கள் யாரையும் அனுமதிக்க கூடாது என்று விதிகள் உள்ளன. ஆனால் அந்த விதிகளை மீறி பிரசவம் பார்த்த ஆப்ரேஷன் தியேட்டரில் வீடியோ எடுக்கவும், தொப்புள்கொடியை அகற்றவும் அனுமதித்த மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பிரசவம் பார்த்த டாக்டர் நிவேதிதா மீதும் மருத்துவ சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.
அந்த புகாரை தொடர்ந்து செம்மஞ்சேரி போலீசார், யூடியூபர் இர்பான் மற்றும் தனியார் மருத்துவமனை நிர்வாகம், டாக்டர் நிவேதிதாவுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளனர். யூடியூபர் இர்பான் தற்போது ஜப்பான் நாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சென்னை வந்ததும் அவரிடம் நேரில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
* மருத்துவமனையில் அரசு மருத்துவ குழு விசாரணை
அரசு மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் இளங்கோவன் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு 7.40 மணிக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்று இர்பான் மனைவிக்கு பிரசவம் நடந்ததாக கூறப்படும் ஆப்பரேஷன் தியேட்டரில் 15 நிமிடங்கள் ஆய்வு செய்தனர்.
டாக்டர் நிவேதிதா உள்ளிட்ட குழுவினரிடம் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர். விசாரணை அறிக்கையின்படி தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் மற்றும் டாக்டர் நிவேதிதா, செவிலியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post விளம்பர நோக்கில் பிரசவ வீடியோ வெளியிட்ட யூடியூபர் இர்பான், டாக்டர் குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.