வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் புதிய 5 நிலை இராஜகோபுரம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

3 hours ago 2

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (20.01.2025) சென்னை, வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் கல்கார மொட்டை கோபுரத்தின் மீது புதிய 5 நிலை இராஜகோபுர கட்டுவதற்கான திருப்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, வில்லிவாக்கம், அருள்மிகு தேவி பாலியம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளையும், அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில், அருள்மிகு சௌமிய தாமோதரப்பெருமாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட சுமார் 800 ஆண்டுகள் பழமையான வில்லிவாக்கம், அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட மொட்டை கோபுரத்தின் மீது ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டுகின்ற பணியை உபயதாரர்கள் நிதியுதவியோடு இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்றோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் மொட்டை கோபுரங்கள் எல்லாம் உயர் கோபுரங்களாக மாறி வருகின்றன.

இந்த அரசு ஏற்பட்டபின், ரூ.151 கோடி மதிப்பீட்டில் 80 புதிய இராஜகோபுரங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் 11 இராஜகோபுரப் பணிகள் முடிவுற்றள்ளதோடு, இதர பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ரூ.58 கோடி மதிப்பீட்டில் 197 இராஜகோபுரங்களை மராமத்து செய்யும் பணி எடுத்துக் கொள்ளப்பட்டு அதில் 94 பணிகள் நிறைவுப்பெற்றுள்ளன. 77 இராஜகோபுர மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அரசு எதையும் சொல்லிவிட்டு போகின்ற அரசு அல்ல. சொன்னதை செய்வதோடு சொல்லாததையும் செய்வோம் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தாரக மந்திரத்தை முன்னின்று செயல்படுத்துகின்ற துறையாக இந்து சமய அறநிலையத்துறை திகழ்ந்து வருகிறது. குடமுழுக்குகளை எடுத்துக் கொண்டால் இன்று நடைபெறும் 14 திருக்கோயில்களின் குடமுழுக்கையும் சேர்த்து 2,392 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. அதில் 1,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 37 திருக்கோயில்களும் அடங்கும்.

நில மீட்பு என்று எடுத்துக் கொண்டால் இதுவரை ரூ.7,126 கோடி மதிப்பீட்டிலான 7,387 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றது. இதில் பத்திற்கும் மேற்பட்ட சொத்துக்கள் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. மாநில வல்லுநர் குழுவால் வரலாற்றில் இல்லாத அளவிற்கு இதுவரை 11,088 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் 5,516 கோடி மதிப்பிலான 23,234 திருப்பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

அதில் ரூ.1,261 கோடி மதிப்பிலான 9,899 திருப்பணிகள் உபயதாரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் எந்த காலத்திலும் இந்த அளவிற்கு உபயதாரர்கள் நிதி வழங்கியது இல்லை. இது திராவிட மாடல் ஆட்சியின் மீது உபயதாரர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ஐந்து நிலை இராஜகோபுர கட்டுமான பணியானது உபயதாரர் திரு.என்.ஜெயபால் அவர்களால் செய்துதரப்படுகிறது.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஏழு கோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் இன்றைக்கு பாலாலயம் நடைபெற்றுள்ளது. வருகின்ற ஜுலை 7 ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு குடமுழுக்கு நடத்துகின்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகின்றது. இந்த திருப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாண்புமிகு முதல்வர் அவர்கள் மாதந்தோறும் கலந்தாய்வு செய்கின்றார்.

கேள்வி : பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்து சமய அறநிலையத்துறையே இருக்காது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளரே?

பதில் : தமிழில் ஒரு பழமொழியை சொல்வார்கள். அத்தைக்கு மீசை முளைக்கட்டும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால்தானே. அதன் தலைவரே இதுவரையில் தமிழக மண்ணில் நின்ற எந்த தேர்தலிலும் வெற்றி என்ற இலக்கை தொடவில்லை. அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் இருக்கின்ற 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகம் மண்ணைக் கவ்வும் என்றும், குறிப்பாக கொங்கு மண்டலங்களில் டெபாசிட் கூட வாங்காது என்றும் தெரிவித்தார்.

ஆனால் 40 தொகுதிகளிலும் வென்று காட்டியவர் திராவிட மாடல் நாயகன் எங்கள் முதல்வர் ஆவார். அவர்கள் எவ்வளவு தான் விழுந்து புரண்டாலும், இது போன்ற ஒன்றுமில்லாத செய்திகளை ஊதி பெரிதாக்கினாலும், 2026 தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சம்மட்டி அடி கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.

ஒரு மக்கள் பிரதிநிதியாக கூட நீங்கள் கூறிய அந்த நபரால் இந்த தமிழக மண்ணிலே வர முடியாது. ஏனென்றால் இது திராவிட மண். இனத்தால். மதத்தால். மொழியால் பிளவுகள் ஏற்படுத்தி குளிர் காயலாம் என்று நினைப்பவர்களுக்கு இரும்பு மனிதனாக எங்கள் முதல்வர் இருக்கின்றார். இதுபோன்ற பொய் பிரச்சாரங்கள் இனி எடுபடாது. திருச்செந்தூரில் எங்களுக்குள் பேசிக் கொண்டு வந்ததை விசுவலாக எடுத்து போட்டிருக்கிறார்கள்.

எப்போதும் ஆணவத்தோடு செயல்படுகின்றவர் எங்கள் மீது குற்றச்சாட்டை சொன்னவர்தான். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சி நடிகர் என யாரையும் விட்டு வைக்காமல் வசை பாடிக் கொண்டிருக்கின்ற பாஜகவின் தலைவருக்கு ஆணவமா அல்லது எங்களைப் போன்ற சமூக அக்கறை கொண்ட, 40 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்க்கையில் இருப்பவர்களான எங்களுக்கு ஆணவமா என்பதை எங்களது பொது வாழ்க்கையின் வயதை கூட எட்டாதவர் கூறுகின்ற சொல்லை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

எங்கள் முதல்வர் அன்பின் பிறப்பிடம், அடக்கத்தின் உறைவிடம். அனைவரையும் மதிப்பவர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை ஏற்று செயல்படுபவர். இது போன்று அண்ணாமலைக்கு எதுவும் இல்லை என்பதால் எதற்கும் உதவாத பொய் பிரச்சாரங்களை கையில் எடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கேள்வி : திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைகள் மட்டுமே உள்ளது என எதிர்கட்சித் தலைவர் கூறியுள்ளார் ?

பதில் : அவர் ஏற்கனவே அதிரடிப்படை அமாவாசையாக மாறியவர்தான். ஆகவே அமாவாசையில் தான் கணக்கு போட்டுக் கொண்டிருப்பார். தமிழக மக்களின் நலனை கணக்கிட்டு ஆட்சி நடத்துகின்ற எங்கள் முதலமைச்சர் அவர்களின் அரும்பணிகளால், திட்டங்களால் 2026 மட்டுமல்ல, 25 ஆண்டு காலம் இந்த திராவிட மண்ணிலே தமிழகத்தினுடைய முதலமைச்சர் என்ற பதவியை எங்கள் முதல்வர் தான் அலங்கரிப்பார் என்பது திண்ணம் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அ வெற்றியழகன் , இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் டாக்டர் இரா. சுகுமார், இணை ஆணையர் கி.ரேணுகாதேவி, துணை ஆணையர் இரா.ஹரிஹரன், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் கூ.பி.ஜெயின், உதவி ஆணையர் கி.பாரதிராஜா, உபயதாரர் என்.ஜெயபால், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஜெ.பாஸ்கர் மற்றும் அறங்காவலர்கள், செயல் அலுவலர் அ.குமரேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் புதிய 5 நிலை இராஜகோபுரம் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Read Entire Article