சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள் ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சரத்குமாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த மாதம் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்தடுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இவரது 150- வது படமான 'தி ஸ்மைல் மேன்' வரும் 27ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தை ஷ்யாம் பர்வீன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் 'மெமரீஸ்' என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். சரத்குமாருடன் சிஜா ரோஸ், இனியா, ஜார்ஜ் மர்யான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
'தி ஸ்மைல் மேன்' திரைப்பட குழுவினர் செய்தியாளர் சந்திப்பில் 'சூர்யவம்சம் 2' குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி விரைவில் அறிவிப்பார் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
கடந்த 1997-ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகி சூப்பர் ஹிட்டித்த திரைப்படம் 'சூர்யவம்சம்'. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அப்பா - மகன் என இருவேடங்களில் உருவான அப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் தேவயானி, ராதிகா, பிரியாராமன், நிழல்கள் ரவி, மணிவண்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஆனந்த்ராஜ் இந்த படத்தில் வில்லனாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த படம் வெளியாகி 27 ஆண்டுகளான நிலையில் தற்போது இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட்டானது. அதிலும் 'நட்சத்திர ஜன்னலில்' பாடல் இன்று வரை அனைவரும் கொண்டாடும் ஒரு பாடலாக உள்ளது.