விரும்பும் முறையில் வீட்டுச் சாப்பாடு!

2 months ago 10

நன்றி குங்குமம் தோழி

பிடித்த உணவுகளை பிடித்த இடங்களுக்குச் சென்று சாப்பிடும் பழக்கம் இந்த தலைமுறையினருக்கு அதிகமாகவே இருக்கிறது. கேண்டில் லைட் டின்னர், கார்டன் டைப்
ஹோட்டல், டஸ்கன் டைப் கஃபே என இளந்தலைமுறைகள் சாப்பிடச் செல்லும் இடங்கள் அதிகமாகவே இருந்தாலும், வீட்டு முறையில் தயாரிக்கப்படுகிற உணவுகளை சாப்பிடுவதற்கும் மனம் ஏங்கும். அப்படி பலரும் விரும்பும் வீட்டுமுறைச் சாப்பாடு கிடைக்கும் உணவகம்தான் சென்னை வளசரவாக்கத்தில் இருக்கிற ‘கல்பாசி மெஸ்.’ பேச்சுலர்கள் விரும்பும் வீட்டுமுறை உணவுகளை அவர்களுக்குப் பிடித்த முறையில் வீட்டில் இருந்தபடி செய்து கொடுப்பதோடு இன்னும் பல வெரைட்டி உணவுகளை கொடுத்து வருகிறார் இந்த உணவகத்தின் உரிமையாளர் காயத்ரி.

வீடே உணவகம்… இந்த ஐடியா உங்களுக்கு எப்படி தோன்றியது எனக் கேட்டதும் சிரித்தபடியே பேசத் தொடங்கினார் காயத்ரி. ‘‘எனக்குச் சொந்த ஊர் கேரளாதான். கடந்த 8 வருடங்களாக சென்னையில்தான் இருக்கிறேன். கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு ஆசிரியர் ஆக வேண்டும் என்ற ஆசை. எனது ஆசைப்படியே சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணி செய்தேன். ஆனால், எனக்கு குழந்தை பிறந்த பிறகு அந்தப் பணியை தொடர முடியவில்லை. பிள்ளைகளை கவனிக்க, வீட்டைப் பார்த்துக்கொள்ள என தொடர்ந்து வீட்டில் இருக்கும்படியே ஆனது. வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பது ஒரு கட்டத்தில் மன அழுத்தமாகவும் இருந்தது. குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள வேண்டும்.

அதே சமயம் வேலைக்கும் செல்ல வேண்டும். இந்த இரண்டையும் சேர்ந்தே செய்ய வேண்டும் என்று யோசிக்கும்போதுதான் வீட்டில் இருந்தபடி மெஸ் ஒன்றை தொடங்கலாம் என யோசித்தேன். எனது விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தவுடன் வீட்டில் இருந்தபடி உணவகம் கொடுக்கும் வசதி உடைய வீட்டை தேடினோம்.
அப்போதுதான் எங்களுக்கு வளசரவாக்கம் பகுதியில் இப்போது மெஸ் நடத்திவரும் வீடு கிடைத்தது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து உணவகம் நடத்த தொடங்கினேன்.

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கேரளா என்பதால் கேரள உணவுகள் அனைத்தும் நன்றாக சமைக்க வரும். அதே நேரத்தில் தமிழ்நாட்டு உணவுகளும் சமைப்பேன். சாப்பிட வருபவர்களுக்கு இந்த இரண்டு உணவுகளையும் கொடுக்கலாம் என்ற யோசனை வந்தது. அதன் பிறகு வாடிக்கையாளர்கள் எந்த மாதிரியான உணவுகள் விரும்புகிறார்களோ அந்த உணவுகளை அவர்கள் விருப்பப்படி செய்து கொடுத்தேன். மெஸ் தொடங்கிய ஆரம்பத்தில் சைவ, அசைவ மீல்ஸ் கொடுத்து வந்தேன். அதோடு சேர்த்து மீன் வறுவல், ப்ரான் தொக்கு, கடம்பா தொக்கும் கொடுத்து வந்தேன். மெஸ் ஆரம்பித்த போது பிரியாணியும் கொடுத்தேன். ஆனால் அதை என்னால் தொடர்ந்து கொடுக்க முடியவில்லை. அதனால் மீல்ஸ், சைடிஷ் அதில் மட்டும் கவனம் செலுத்தி இன்னும் என்னவெல்லாம் வெரைட்டி கொடுக்க முடியுமோ அத்தனையும் கொடுக்கிறேன்.

நமது கடைக்கு நிறைய பேச்சுலர்ஸ் மற்றும் வீட்டுமுறை உணவுகளை சாப்பிட நினைப்பவர்கள் வருகிறார்கள். அவர்களுக்குப் பிடித்த உணவுகளை அவர்களே எப்படி செய்ய வேண்டும் என கேட்கிறார்களோ அப்படி செய்து கொடுக்கிறேன். அதேபோல், இங்கு பரிமாறப்படும் அனைத்து உணவுகளையும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காகவே சட்டி சோறு அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

கேரளாவில் இந்த சட்டி சோறு பிரபலம். அந்த முறையைத்தான் எனது மெஸ்ஸிலும் கொண்டு வந்திருக்கிறேன். அதாவது, ஒரு மண் பானையில் சோறு, குழம்பு, கூட்டு, பொரியல், அப்பளம், ஊறுகாய் அதனோடு நமது கடையில் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்தையும் கொடுக்கிறோம். சிக்கன், இறால், கடம்பா, மீன் என அனைத்தும் சேர்த்து அந்த சட்டி சோறு காம்போவில் கொடுக்கிறோம். நம்முடைய இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம், பழைய கஞ்சி. அதாவது, பழைய சோறு. கடைக்கு சாப்பிட வருபவர்கள் விரும்பி கேட்டதால் இதையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். பழைய சோற்றுக்கு கருவாட்டு தொக்கு காம்பினேஷனாக தருகிறோம். கருவாட்டு தொக்கு விரும்பாதவர்களுக்கு சிக்கன், மீன், இறால் என அவர்கள் விரும்புவதை தருகிறோம்’’ என்றவர் மெஸ்சில் உள்ள உணவுகளைப் பற்றி பகிர்ந்தார்.

‘‘தமிழ்நாடு மற்றும் கேரளா என இரண்டு வகையான சாப்பாடு கிடைப்பதால், இரண்டையுமே விரும்பி சாப்பிடுகிறார்கள். கேரளா உணவில் மட்டை அரிசி சாப்பாடு முதல் மத்தி மீன் கறிவரை தருகிறோம். அதில் பொரிச்ச மீன் ஸ்பெஷல். கூடுதலாக, கோதுமை பரோட்டா, ஆம்லேட்டும் கிடைக்கும். இங்கு இறால் தொக்கு ஃபேமஸ். பலர் தொக்கு மட்டுமே வாங்கி சாப்பாட்டில் கலந்து சாப்பிடுவார்கள்.

வீட்டுமுறை உணவு என்பதால் சமைப்பதில் இருந்து உணவுப் பொருட்கள் தயாரிப்பது வரை அனைத்துமே எனது கன்ட்ரோலில்தான் இருக்கும். வீட்டுச் சாப்பாட்டிற்கு மசாலாக்கள்தான் முக்கியம். மிளகாய், மல்லி, மிளகு என மசாலாவிற்கு தேவையான அனைத்தும் நாங்களே வாங்கி தயார் செய்கிறோம். இங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவருமே பெண்கள்தான்.

முதலில் உணவகம் தொடங்கும்போது நானும் எனக்குத் துணையாக மூன்று பெண்களும் மட்டும்தான் இருந்தோம். இப்போது என்னோடு சேர்ந்து ஒன்பது பெண்கள் இங்கு வேலை
செய்கிறார்கள். வீட்டில் இருந்தபடி வேலை பார்க்க விரும்பிய பெண்கள் தான் எனக்கு இங்கு உதவியாக இருக்கிறார்கள். 5 கிலோ அரிசியில் தொடங்கிய உணவகம் தற்போது 25 கிலோ அரிசி வரை சமைக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கிறோம்.

காலை 12:30க்கு துவங்கி மாலை 4 மணி வரை செயல்படும் எங்க மெஸ்சில் விரும்பி சாப்பிட வருபவர்கள் பெரும்பாலும் பேச்சுலர்கள்தான். அவர்கள்தான் வீட்டுச் சாப்பாட்டிற்காக ஏங்குவார்கள். அதனால் அவர்கள் விரும்பும் வகையில்தான் உணவினை சமைத்து தருகிறோம். இது சாப்பாடு பிசினஸ் என்பதால், சமைக்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் மிகவும் கவனமாக இருக்கிறோம். காய்கறி முதல் அசைவ உணவிற்கு தேவையான மட்டன், சிக்கன், கடல் உணவுகள் அனைத்தும் மிகவும் தரமாக உள்ளதா என்று பார்த்துதான் வாங்குகிறோம். வீட்டில் இருந்தபடியே தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கும்’’ என்று கூறுகிறார் காயத்ரி.

தொகுப்பு: ச.விவேக்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

 

The post விரும்பும் முறையில் வீட்டுச் சாப்பாடு! appeared first on Dinakaran.

Read Entire Article