விருத்தாசலம், பிப். 11: விருத்தாசலம் அருகே காதலித்த பெண் மாற்றுத்திறனாளி என்பதால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே தலைமறைவான மாப்பிள்ளையை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (32). டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வடலூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தபோது தன்னுடன் படித்த 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் தற்போதும் நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெண்ணுக்கும், இவருக்கும் திருமணம் நடத்த இரு வீட்டார் சம்மதத்துடன் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு நேற்று விருத்தாசலம் அருகே உள்ள கொளஞ்சியப்பர் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மங்கலம்பேட்டையில் இருந்து அந்த பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் மோசட்டை கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது வீட்டு தெய்வத்திற்கு கூரை புடவை வைத்து படைத்துக் கொண்டிருந்தபோது பெண்ணின் இடது கையில் விரல்கள் இல்லாமல் இருப்பதை பார்த்த விக்னேஷ் மற்றும் பெற்றோர், உறவினர்கள் மாற்றுத்திறனாளி பெண் என கூறி திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏமாற்றத்திற்கு உள்ளான அந்த பெண் இதுகுறித்து உறவினர்களுடன் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 2 குடும்பத்தினரையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே மாப்பிள்ளை விக்னேஷ் திடீரென தலைமறைவானார். இதை தொடர்ந்து போலீசார் அவரை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அப்பெண்ணின் புகாரைப் பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மாப்பிள்ளையை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post விருத்தாசலம் அருகே பரபரப்பு: காதலித்த பெண் மாற்றுத்திறனாளி என்பதால் திருமணம் திடீர் நிறுத்தம் appeared first on Dinakaran.