விருதுநகர்: விருதுநகர் அருகே தாதபட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர் அருகே தாதபட்டியில் மோகன் ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்யபிரபு பட்டாசு ஆலை உள்ளது. இதில் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. வழக்கம் போல் பணியாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பிற்பகல் திடீரென உராய்வின் காரணமாக பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் 6க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்து , ஒருவர் பலியாகி உள்ளதாகவும், 7 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆலையில் தொடர்ந்து வெடி விபத்து ஏற்பட்டு வருவதால் தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வெடி சத்தம் குறைந்த காரணத்தினால் தீயணைப்பு துறையினர் உள்ளே சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 6 அறைகளும் முற்றிலுமாக தரைமட்டமான காரணத்தினால் இடிபாடுகளில் சிக்கி யாரேனும் உயிரிழந்திருக்கிறார்களா என்பது குறித்து இடிபாடுகளை அகற்றியபோது தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விருதுநகர் அருகே தாதபட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 7 பேர் படுகாயம் என தகவல் appeared first on Dinakaran.