சென்னை: விருகம்பாக்கத்தில் நடிகர் கருணாஸ் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில நிர்வாகி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், போலி பத்திரிகையாளர் உள்பட 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் கொலை செய்து விட்டு நாங்குநேரியில் பதுங்கி இருந்த கார் டிரைவரான கூலிப்படை தலைவன் கார்த்திக்கை, அவரது நண்பருடன் தனிப்படையினர் கைது செய்தனர். உள்ளூர் பிரச்னையில் வழக்கறிஞர் தலையிட்டதால் திட்டமிட்டு அவருக்கு கார் டிரைவராக பணியில் சேர்ந்து ரவுடி கார்த்திக் தனது நண்பருடன் இணைந்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் வழக்கறிஞர் வெங்கடேசன் (38). இவர், தொழில் தொடர்பாக விருகம்பாக்கம் கணபதிராஜா பிரதான சாலையில் உள்ள பவுல்ராஜ் குடியிருப்பில் தனது நண்பர் சேதுபதியுடன் இணைந்து கடந்த 4 மாதங்களாக வாடகைக்கு வசித்து வந்தார். நடிகர் கருணாஸ் நடத்தும் முக்குலத்தோர் புலிப்படையின் வழக்கறிஞர் பிரிவு மாநில இணை செயலாளராக வெங்கடேசன் இருந்தார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக வெங்கடேசன் வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் குடியிருப்புவாசிகள் சந்தேகமடைந்து நேற்று முன்தினம் சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீடு முன்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்த போது, கதவு பூட்டப்படாமல் இருந்தது. போலீசார் உள்ளே சென்று பார்த்த போது, வழக்கறிஞர் வெங்கடேசன் படுக்கை அறையில் தலை மற்றும் முகத்தில் பலமான வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
அவரது முகத்தில் வெட்டப்பட்ட கத்தி முகத்திலேயே இருந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால், வழக்கறிஞர் உடலை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். பின்னர் கொலை செய்யப்பட்ட வெங்கடேசன் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதேநேரம் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அறிந்து அவரது மனைவி சரளா கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். மேலும், கொலை தொடர்பாக சரளா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வழக்கறிஞர் வெங்கடேசனுடன் தங்கி இருந்த திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கார்த்திக் (32) தலைமறைவாகி இருந்தார். இவர் தான் வெங்கடேசனுடன் எப்போதும் இருப்பார். கார் டிரைவர் கார்த்திக் மீது கொலை உள்பட 27 வழக்குகள் இருப்பதும், திருநெல்வேலி மாவட்ட ‘பி’ கேட்டகிரியை சேர்ந்த கூலிப்படையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.இதனால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது.
அதேநேரம் வழக்கறிஞர் கடைசியாக அவரது நண்பர்களான கிழக்கு தாம்பரம் ஏரிக்கரை தெருவை சேர்ந்த பிரபு (37) என்ற போலி பத்திரிகையாளர் மற்றும் மேடவாக்கம் வேங்கைவாசல் அன்னை அவந்திகா பகுதியை சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் சுந்தர் (37) என்பவருடன் அடிக்கடி பேசியது தெரியவந்தது.
உடனே போலீசார் போலி பத்திரிகையாளர் பிரபு மற்றும் சுந்தரை பிடித்து விசாரணை நடத்திய போது, கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனுக்கும் கார் டிரைவர் கார்த்திக்கிற்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும், வழக்கறிஞர் வெங்கடேசன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து, தலைமறைவாக உள்ள கார் டிரைவரான ரவுடி கார்த்திக் தொடர்பாக விசாரணை நடத்திய போது, 2 நாட்களுக்கு முன்பு வழக்கறிஞரை கொலை செய்துவிட்டு சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அதைதொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. ஒரு தனிப்படையினர் சிவகங்கை மாவட்டத்திற்கும், மற்றொன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதிக்கும் சென்றனர். மேலும் ஒரு தனிப்படை கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனின் நண்பர்களான பிரபு மற்றும் சுந்தர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, பிரபு மற்றும் சுந்தர் ஆகியோர் தினமும் வழக்கறிஞருடன் மது அருந்துவதும், பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. பெரிய அளவிலான நில பிரச்னை தொடர்பாக இந்த கொலை நடந்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருந்தாலும் சம்பவத்தன்று கார் டிரைவரான ரவுடி கார்த்திக் தான் வெங்கடேசனுடன் இருந்தார். நாங்கள் வீட்டிற்கு கிளம்பிவிட்டோம் என்று கூறியுள்ளனர். இதைதொடர்ந்து தனிப்படையினர் வெங்கடேசனின் செல்போனுக்கு கடந்த ஒரு வாரமாக தொடர்பு கொண்ட நபர்கள் மற்றும் ரவுடி கார்த்திக் செல்போன் விவரங்களை ஆய்வு ெசய்தனர். அப்போது தான், கார் டிரைவர் கார்த்திக் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சொந்த ஊரில் உள்ள பிரச்னைகளில் வழக்கறிஞர் வெங்கடேசன் ரவுடி கார்த்திக்குக்கு எதிராக சில வேலைகளை செய்து வந்ததாக தெரிகிறது. இது ரவுடி கார்த்திக்கிற்கு பிடிக்கவில்லை. இதனால் அடிக்கடி மது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பிரச்னைகளில் வழக்கறிஞர் வெங்கடேசன் தலையிட்டு வந்துள்ளார். கட்டப்பஞ்சாயத்தில் வரும் பணத்தை பங்கு பிரித்ததிலும் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் திருநெல்வேலியில் ரவுடியிஷத்தில் வளரமுடியாத நிலையில் ரவுடி கார்த்திக் இருந்துள்ளார். அதன் பிறகு தான், வழக்கறிஞர் வெங்கடேசனை கொலை ெசய்தால், தனக்கு எந்த பிரச்னையும் வராது, திருநெல்வேலியில் பெரிய ரவுடி தான் என்று முடிவு செய்துள்ளார். வெங்கடேசன் சென்னையில் வழக்கறிஞர் தொழில், அரசியல் கட்சியில் மாநில நிர்வாக பதவியில் இருப்பதால், அவரை நேருக்கு நேர் மோதி படுகொலை செய்ய முடியாது என்று ரவுடி கார்த்திக் முடிவு ெசய்துள்ளார். இதனாலேயே ரவுடி கார்த்திக் பழைய குற்றவழக்கில் போலீசார் தன்னை கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.
எனவே, தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் கார் டிரைவராக வேலை வேண்டும் என்றும் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் உதவியுடன் சென்னைக்கு வந்து வழக்கறிஞர் வெங்கடேசனிடம் கார் டிரைவராக பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. ஆனால் வெங்கடேசன் தனக்கு ரவுடி கார்த்திக் எதிரி என்று தெரிந்தும் அரசியல் பிரமுகர் பரிந்துரையால் வேறு வழியின்றி கார் டிரைவராக பணியில் சேர்த்து கொண்டதாக கூறப்படுகிறது. பிறகு ரவுடி கார்த்திக் தான் திருந்தி வாழ்வது போல் நடித்து வெங்கடேசனை திட்டமிட்டு படுகொலை ெசய்ததும் தெரியவந்ததாகவும், இருந்தாலும் குற்றவாளியை கைது செய்தால் தான் கொலைக்கான முழு விவரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
அதைதொடர்ந்து கோயம்பேடு பேருந்து நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை ரவுடி கார்த்திக்கை கைது செய்ய சிவகங்கை மாவட்டத்திற்கு விரைந்து ெசன்றனர்.
ஆனால் ரவுடி கார்த்திக் அங்கிருந்து தப்பி தனது சொந்த ஊரான நாங்குநேரியில் பதுங்கியது செல்போன் சிக்னல் உதவி மூலம் தெரியவந்தது. உடனே தனிப்படையினர் நாங்குநேரி சென்று உள்ளூர் போலீசார் உதவியுடன் நேற்று ரவுடி கார்த்திக் மற்றும் அவரது நண்பர் ரவியை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர். தீவிர விசாரணைக்கு பிறகே வழக்கறிஞர் வெங்கடேசன் கொலை குறித்து முழுமையான தகவல்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் உதவியுடன் சென்னைக்கு வந்து வழக்கறிஞர் வெங்கடேசனிடம் கார் டிரைவராக ர வுடி கார்த்திக் பணிக்கு சேர்ந்தது தெரியவந்தது. ஆனால் வெங்கடேசன் தனக்கு ரவுடி கார்த்திக் எதிரி என்று தெரிந்தும் அரசியல் பிரமுகர் பரிந்துரையால் வேறு வழியின்றி கார் டிரைவராக பணியில் சேர்த்து கொண்டதாக கூறப்படுகிறது.
The post விருகம்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் சடலம் மீட்பு; நடிகர் கருணாஸ் கட்சியின் வக்கீல் வெட்டி படுகொலை: நாங்குநேரியில் கூலிப்படை தலைவன், நண்பர் கைது appeared first on Dinakaran.