விராட் கோலியின் உணர்வுகளுடன் விளையாடுங்கள் - ஆஸ்திரேலிய அணிக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்

2 hours ago 1

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சமீப காலமாக சொந்த மண்ணில் கூட சுமாரான செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இந்த தொடரில் இந்தியா வெற்றி பெற அவர் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

மேலும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இதில் குறைந்தபட்சம் 4 போட்டிகளில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வி இந்தியாவுக்கும் விராட் கோலிக்கும் பெரிய அழுத்தத்தை கொடுத்திருக்கும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் மெக்ராத் தெரிவித்துள்ளார். எனவே அந்த அழுத்தத்தை பயன்படுத்தி விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய பவுலர்கள் அட்டாக் செய்தால் இந்தியாவை எளிதாக வீழ்த்த முடியும் என்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார். குறிப்பாக ஸ்லெட்ஜிங் செய்து விராட் கோலியின் உணர்வுகளுடன் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "3 - 0 என்ற கணக்கில் நியூசிலாந்துக்கு எதிராக சந்தித்த தோல்வியால் இந்தியா மீது நிறைய அழுத்தம் இருக்கும். எனவே அந்த அழுத்தத்தை தாண்டி அவர்கள் வருகிறார்களா என்பதை பாருங்கள். விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியினர் மிகவும் கடினமாக அழுத்தத்தை போட முயற்சிக்க வேண்டும். குறிப்பாக ஸ்லெட்ஜிங் செய்து அவரின் உணர்வுகளுடன் விளையாட வேண்டும்.

எப்படி இருந்தாலும் விராட் கோலி கொஞ்சம் அழுத்தத்தின் கீழ் இருப்பார். ஒருவேளை தொடரின் தொடக்கத்திலேயே சில குறைவான ஸ்கோர் எடுத்தால் விராட் கோலி இன்னும் அதிகப்படியான அழுத்தத்தை உணர்வார். விராட் கோலி கொஞ்சம் உணர்வுபூர்வமான வீரர். அதைத் தாண்டி மேலே வரும்போது அவர் இன்னும் மேலே வருவார் கீழே செல்லும்போது கொஞ்சம் தடுமாறுவார்" என்று கூறினார்.

Read Entire Article