
துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். சமீப காலமாக பார்மின்றி தவித்து வந்த அவர் இந்த முக்கியான போட்டியில் சதத்தை அடித்து தனது தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் விராட் கோலி 86 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தபோது அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இதனால் அவரால் சதம் அடிக்க முடியுமா? என்று கேள்வி எழுந்தது. இருப்பினும் அவருடன் இறுதி கட்டத்தில் ஜோடி சேர்ந்த அக்சர் படேல் சிங்கிள் அடிப்பதிலேயே கவனம் செலுத்தி விராட் கோலி சதம் அடிப்பதற்காக உதவினார். இறுதியில் விராட் கோலி பவுண்டரி அடித்து தனது சதத்தை நிறைவு செய்தார்.
இந்நிலையில் விராட் கோலி சதம் அடிப்பதற்காக தாம் கணக்கு போட்டதாக அக்சர் படேல் சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "கடைசி நேரத்தில் விராட் கோலியின் சதத்தை பற்றி நானும் கணக்கு போட்டேன். அந்த சமயத்தில் நான் எட்ஜ் கொடுத்து தெரியாத்தனமாக கூட பவுண்டரிக்கு அடித்து விடக்கூடாது என்று நினைத்தேன். அது ஜாலியாக இருந்தது. முதல் முறையாக இந்திய அணியில் இருந்து ஒரு அதிகப்படியான அழுத்தம் நிறைந்த ஆட்டத்தில் விராட் கோலி சதத்தை அடிப்பதை நேராக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது நானும் நிறைய வேடிக்கையான அனுபவங்களைப் பெற்றேன். 50 ஓவர்கள் பீல்டிங் செய்த பின்பும் விராட் கோலி ரன்கள் எடுப்பதற்கு வேகமாக ஓடினார். அது எந்தளவுக்கு அவர் தனது பிட்னஸ் லெவலை பின்பற்றுகிறார் என்பதைக் காட்டுகிறது" என்று கூறினார்.