
மும்பை,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் நிர்ணயித்த 242 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். சமீப காலமாக பார்மின்றி தவித்து வந்த அவர் இந்த முக்கியான போட்டியில் சதத்தை அடித்து தனது தரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் இன்னும் 2 - 3 வருடங்கள் விளையாடி 10 - 15 சதங்கள் அடிக்கும் திறமையும் தகுதியும் விராட் கோலியிடம் இருப்பதாக இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த சதத்துக்கு பின் விராட் கோலி இன்னும் 2 - 3 வருடங்கள் விளையாடி 10 - 15 சதங்கள் அடிப்பார் என்று நான் உறுதியாக சொல்வேன். சச்சின் டெண்டுல்கர் எப்போதும் பின்னங்காலில் பஞ்ச் (பேக்புட் பஞ்ச்) கொடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார். கவாஸ்கர் சிறப்பாக ஸ்ட்ரைட் டிரைவ் அடிப்பார். அதே போல விராட் கோலியை பார்த்தால் அவர் அழகாக கவர் டிரைவ் அடிக்கிறார்.
இந்தப் போட்டியின் தொடக்கத்தில் விராட் கோலி அடித்த ரன்கள் விமர்சனம் செய்த அனைவருக்கும் தன்னுடைய குணத்தை அவர் காட்டுவது போல் இருந்தது. இது போன்ற சூழ்நிலைகளை கடந்து கிரிக்கெட்டராக வரும் நீங்கள் குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருப்பீர்கள். இந்தியாவில் அவர் அனைத்து புறங்களிலும் விமர்சனம் செய்யப்பட்டார். 10 பேர் இருந்தால் அவர்களிடம் 20 வகையான கருத்துகள் இருக்கும். அந்த 20-ல் 18 முதல் 19 கருத்துகள் எதிராக இருக்கும்.
சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி கொண்டு வரும் மதிப்பை நீங்கள் உணர வேண்டும். வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 99 இன்னிங்சில் 89.60 என்ற சராசரியை கொண்டுள்ள விராட் கோலி அழுத்தத்தை எந்தளவுக்கு கையாள்கிறார் என்பதை நீங்கள் புரிய வேண்டும். அழுத்தத்தை அவர் அனுமதிக்கவில்லை. அது கடினமாகும்போது அசத்துவதே அவருடைய முத்திரையாகும்" என்று கூறினார்.