
முல்லன்பூர்,
ஐ.பி.எல். தொடரில் கடந்த 20ம் தேதி முல்லன்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை விராட் கோலி வென்றார்.
அந்தப் போட்டி முடிந்ததும் விராட் கோலியை பஞ்சாப் அணியின் இளம் வீரர் முஷீர் கான் நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது விராட் கோலியிடம் தமக்கு ஒருபேட்டை பரிசாக கொடுக்குமாறு முஷீர் கான் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்டதும் உடனடியாக விராட் கோலி தனது பேட் ஒன்றை முஷீர் கானுக்கு பரிசாகக் கொடுத்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அதைச் சிரித்த முகத்துடன் வாங்கிக் கொண்ட முஷீர் கான் பஞ்சாப் அணியின் உடை மாற்றும் அறைக்கு சென்றுள்ளார். அங்கே இது யாருடைய பேட்? என்று சக வீரர் கேட்டார். அதற்கு இது "விராட் பையா கொடுத்த பேட்" என்று முஷீர் கான் மகிழ்ச்சியுடன் சொன்னார். அத்துடன் விராட் கோலி அந்தப் பரிசை தமக்குக் கொடுத்த போது தான் அழுததாகவும் முஷீர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மேலும், நீங்கள் பரிசாக கொடுத்த பேட்டை தன்னுடைய அண்ணன் சர்பராஸ் கான் தமக்கு கொடுத்ததாக விராட்டிடம் சொன்னதாக முஷீர் கான் கூறினார். அதை பயன்படுத்தியே இவ்வளவு ரன்கள் அடித்து வளர்ந்துள்ளதாக விராட் கோலியிடம் சொன்னதாகவும் முஷீர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு, விராட் பையா பேட்டை கொடுத்த போது நான் அழத் துவங்கினேன்.
மேலும், நீங்கள் கொடுத்த இது போன்ற பேட்டில் நான் ஏராளமான ரன்கள் அடித்துள்ளேன் என்றும் விராட் பையாவிடம் சொன்னேன். நீங்கள் கொடுக்கக்கூடிய பேட்டை சர்பராஸ் பாய் எனக்கு பரிசாக கொடுத்து விடுவார் என்றும் விராட் பாயிடம் சொன்னேன் எனக் கூறினார். அந்த வீடியோவை பஞ்சாப் நிர்வாகம் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.