விராட் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர் - அனில் கும்ப்ளே

5 hours ago 3

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 2011-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆன அவர் 123 போட்டிகளில் விளையாடி அதில் 30 சதம் உட்பட 9,230 ரன்கள் குவித்துள்ளார்.

மேலும் 68 போட்டிகளில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ள விராட் அதில் 40 போட்டிகளை வென்று கொடுத்து இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டனாகவும் வரலாறு படைத்துள்ளார். அந்த சூழலில் தற்போது ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி விளையாடி வந்த 4வது இடத்தில் யார் விளையாடுவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. தற்போது இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயர் இந்திய அணியில் இடம்பெறுவதற்கு தகுதியானவர். எனவே அவர் விராட் கோலியின் நான்காவது இடத்தில் களமிறங்கலாம். இங்கிலாந்தில் முக்கியமான நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாடுவதற்கு குறிப்பிட்ட அனுபவம் தேவை. கருண் நாயர் இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்.

அவருக்கு இங்கிலாந்தில் உள்ள நிலைமைகள் குறித்து நன்றாக தெரியும். எனவே, அவர் இந்திய அணியில் சேர்வதற்கு தகுதியான வீரராக இருப்பார். மேலும், இந்தியாவில் இளைஞர்களும் இருக்கிறார்கள். சாய் சுதர்சன் இருக்கிறார். மேலும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு பகுதியாக இருந்த அபிமன்யு ஈஸ்வரன் இருக்கிறார். ஆனால், இவர்கள் குறித்த தகவல் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

முதல் தர மட்டத்தில் சிறப்பாக விளையாடியவர்களுக்கு நிச்சயமாக இந்திய அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். கருண் நாயர் போன்ற உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியவர்கள் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவரைப் போன்ற உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருபவர்களுக்கு அதிக அளவில் நம்பிக்கை கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Read Entire Article