கூடலூர் : கூடலூர் நகராட்சியில் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று கூடலூர் பஜார் – ஊட்டி மைசூர் சாலையில் அக்காடு சாலை சந்திப்பு துவங்கி புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் சுங்கம் ரவுண்டானா பகுதி வரை நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன. அப்பகுதியில் வாகன நிறுத்தமும் அகற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் நடைபாதை வியாபாரிகள் காய்கறி, துணி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வியாபாரங்கள் மேற்கொண்டு வந்தனர்.
மேலும் ஏராளமான இரு சக்கர வாகனங்களும் தினசரி நிறுத்தப்பட்டு வந்தன. இதனால் இந்த சாலையில் பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் செல்லும்போது மற்ற வாகனங்கள் அதனை முந்தி செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகன் இருவரும் வாகனத்தை முந்தி சென்ற லாரிக்கு இடம் விடுவதற்காக இடது புறம் ஒதுக்கிய போது அங்கு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்கு உள்ளாயினர். இதில் லாரி பின் சக்கரத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு காரணம் இங்கு வைக்கப்பட்டுள்ள நடைபாதை கடைகள் மற்றும் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் என்றும், அவற்றை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூடலூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினரும் நடைபாதை கடை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவே நடைபாதை வியாபாரிகள் அங்கிருந்த கடைகளை அகற்றினர்.
தற்போது இப்பகுதியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். நடைபாதை கடைகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதால் சாலை விரிவாகி வாகனங்கள் சென்று வருவதற்கு இலகுவாக உள்ளதாகவும், இங்குள்ள கடை வீதியில் பொருட்களை வாங்குவோர் தாங்கள் நடத்தி வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி பொருட்களை ஏற்றிச் செல்ல வசதியாக உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடைபாதை கடைகள் அகற்றப்பட்டதால் கடந்த பல வருடங்களாக இங்கு வியாபாரம் செய்து வந்த 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக நடைபாதை வியாபாரிகள் தெரிவித்தனர்.
நடைபாதை வியாபாரத்தை நம்பி வங்கி மற்றும் கடன் நிறுவனங்களில் சிறு கடன்கள் வாங்கி தினசரி செலுத்தி வந்ததாகவும், இப்போது முற்றிலுமாக வியாபாரம் நிறுத்தப்பட்டதால் வாழ்வாரம் பாதிக்கப்பட்டு வாங்கிய கடன்களை அடைக்க முடியாத நிலையில், வேறு தொழில்கள் செய்யாத முடியாத நிலையிலும் உள்ளதாகவும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டுள்ள நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைத்து அரசியல் அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வியாபாரிகள் சங்க கோரிக்கையை ஏற்று கூடலூர் நகராட்சி பகுதியில் நடைபாதை கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.