வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதியில் அடுத்தடுத்து 3 பேரை வெட்டி நகை, பணம், செல்போன் பறிப்பு: மர்ம ஆசாமிகளுக்கு வலை

3 weeks ago 6

பெரம்பூர்: வியாசர்பாடி பள்ள தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (34). கேன் தண்ணீர் சப்ளை செய்யும் நிறுவனத்தில் சரக்கு வாகன டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு, நடந்து சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், தேவராஜை கத்தியால் வெட்டிவிட்டு அவரது செல்போன் மற்றும் 4 சவரன் செயினை பறித்துச் சென்றனர். தேவராஜை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

* செம்பியம் தீட்டி தோட்டம் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜாபர் அகமது (57). கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று அதிகாலை கறிக்கடைக்கு ஆடு வாங்குவதற்காக சைக்கிளில் புளியந்தோப்பு கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை அருகே சென்றபோது, பைக்கில் வந்த 2 பேர், இவரை கத்தியால் வெட்டிவிட்டு, அவர் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜாபர் அஹமது ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

* கிருஷ்ணகிரி மாவட்டம் வெங்கடபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (40). மணலியில் உள்ள தனது தங்கை புஷ்ப லதாவை பார்ப்பதற்காக ரயில் மூலம் பெரம்பூர் ரயில் நிலையம் வந்து, நேற்று அதிகாலை மாதவரம் நெடுஞ்சாலை வழியாக மூலக்கடைக்கு நடந்து சென்றார். அப்போது பைக்கில் வந்த 2 பேர், இவரை சரமாரியாக தாக்கி, கையில் வைத்திருந்த தீபாவளி பட்டாசு மற்றும் புது துணிகளை பறித்து சென்றனர்.

இவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 3 சம்பவங்களிலும் ஈடுபட்டது அதே நபர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

The post வியாசர்பாடி, புளியந்தோப்பு பகுதியில் அடுத்தடுத்து 3 பேரை வெட்டி நகை, பணம், செல்போன் பறிப்பு: மர்ம ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Read Entire Article