பெரம்பூர்: வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் வளாகத்தில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை திறந்து வைத்தார். சென்னை வியாசர்பாடியில் 800 ஆண்டு பழமை வாய்ந்த இரவீஸ்வரர் கோயில் உள்ளது. தரைத்தளத்தில் இருந்து ஐந்து அடிக்கும் கீழே இக்கோயில் உள்ளதால் 9 அடிக்கு உயர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு எதிரே கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பாழடைந்த கட்டிடம் இருந்தது. அதை இடித்துவிட்டு திருமண மண்டபம் கட்டும் பணி கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம்தேதி தொடங்கியது. சுமார் 56 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பணி நடைபெற்று வந்தது.
பணிகள் அனைத்தும் முடிவுற்று இன்று காலை திருமண மண்டபம் திறப்பு விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். 250 பேர் வரை உட்காரும் வசதி கொண்ட திருமண மண்டபம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. வியாசர்பாடி பகுதியில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் வசிப்பதால் மிகவும் குறைவான விலையில் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களை நடத்தி கொள்ள திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இரவீஸ்வரர் கோயிலில் திருமணம் செய்து கொள்ளும் நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் திருமண மண்டபம் அளிக்கப்படும்.
இதை இப்பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் ஆனந்தி, ஷர்மிளா காந்தி, மலைச்சாமி, ஜீவன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பழனி, இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் சிவகுமார், கோயில் நிலைய அதிகாரி ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் வளாகத்தில் ரூ.56 லட்சத்தில் திருமண மண்டபம் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு திறந்து வைத்தார் appeared first on Dinakaran.