லண்டன்: விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் நேற்று, போலந்து வீராங்கனை இகா ஸ்வியடெக் அபார வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். உலகின் முக்கியத்துவம் வாய்ந்த கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டி ஒன்றில், போலந்தை சேர்ந்த உலகின் 4ம் நிலை வீராங்கனை இகா ஸ்வியடெக், ரஷ்ய வீராங்கனை லியுட்மிலா சாம்சனோவா மோதினர்.
அசுர வேகத்தில் ஆடிய இகா, முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து, 2வது செட்டை சற்று போராடி, 7-5 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றினார். அதனால் போட்டியில் வென்ற இகா, அரை இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலிண்டா பென்சிக், ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் இருவரும் ஆக்ரோஷமாக மோதியதால், முதல் செட் டை பிரேக்கர் வரை நீண்டது. கடைசியில், 7-6 (7-3) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை பென்சிக் வசப்படுத்தினார். அதைத் தொடர்ந்து நடந்த 2வது செட்டும் டைபிரேக்கர் வரை சென்றது. அந்த செட்டை, 7-6 (7-2) என்ற புள்ளிக் கணக்கில் பென்சிக் கைப்பற்றினார். அதனால் போட்டியில் வென்ற அவர் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
The post விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் வேகத்தில் வீழ்த்திய இகா appeared first on Dinakaran.