விமானத்தில் வந்து கைவரிசை காட்டிய ஏடிஎம் கொள்ளையர்கள்

3 months ago 32

நாமக்கல்,

கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்து விட்டு தப்பி வந்த கொள்ளை கும்பல் தமிழக போலீசிடம் சிக்கியது. கொள்ளையர்களை பிடிக்கும்போது ஏற்பட்ட மோதலில் ஒரு கொள்ளையன் சுட்டுக்கொல்லப்பட்டான். மற்றொருவன் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறான். இது தவிர 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கொள்ளையர்கள் பிடிபட்டது தொடர்பாகவும், அவர்களிடம் நடந்த விசாரணை பற்றியும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் வெப்படையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்டெய்னர் கொள்ளையர்களிடம் ஆந்திரா மற்றும் கேரளா போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஒடிசா மாநில போலீசாரும் விவரங்களை கேட்டு உள்ளனர். திருச்சூர் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில், தொடர்புடையவர்கள் 7 பேர் மட்டும் தான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? என விசாரணை நடத்தி உள்ளனர்.

இவர்கள் மீது வெவ்வேறு மாநிலங்களில் வழக்கு இருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் ஒரு வழக்கில், ஒருவர் சிறையில் இருந்து வந்து உள்ளார். இவர்களில் ஒரு சில நபர்கள் மீது வழக்கு இல்லாமல் உள்ளது. ஒரு சில நபர்கள் மீது ஒன்று, இரண்டு வழக்குகளும், ஒருவர் மீது 4 மற்றும் 5 வழக்குகளும் உள்ளன.

இந்த ஏடிஎம்களில் கொள்ளை அடித்ததாக கூறுகின்றனர். எவ்வளவு பணம் என அந்தந்த மாநில போலீசார் தெரிவித்தால்தான் தெரியும். கல்வித்தகுதியை பொறுத்தவரை, ஒரு சிலர் படித்து உள்ளனர். ஒரு சிலர் 3-ம் வகுப்பு படித்தவர்களும் இருக்கின்றனர்.

ஏடிஎம்களில் பாதுகாவலர் நியமிக்க அறிவுறுத்தி உள்ளோம். ஒரு சில குறிப்பிட்ட ஏடிஎம் மையங்களில் குறைபாடு உள்ளது. அவற்றை குறிவைத்துதான் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுகின்றனர்.

அவ்வாறு உள்ள ஏடிஎம் மையங்களில், கூடுதல் பாதுகாப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்த உள்ளோம். இதுவரை எங்களது விசாரணை முடிந்துள்ளது. மேற்கொண்டு தகவல் ஏதாவது தேவைப்பட்டால் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம்.

கொள்ளையர்களில் 2 பேர் டெல்லியில் இருந்து விமானத்தில் வந்து உள்ளனர். 3 குற்றவாளிகள் காரில் வந்துள்ளனர். 2 குற்றவாளிகள் கன்டெய்னர் லாரியில் வந்து உள்ளனர். இவர்கள் சென்னையில் ஒன்றிணைந்து, கார் மற்றும் கன்டெய்னர் லாரியில் திருச்சூர் சென்று உள்ளனர். அவர்களிடம் இருந்து, ரூ.67 லட்சம் பறிமுதல் செய்துள்ளோம். அவற்றை நீதிமன்றத்தில் ஒப்படைத்து விடுவோம்.

அரியானா, ராஜஸ்தான் மாநில எல்லையில் மேவாட் ஏரியா உள்ளது. இவர்கள் அனைவரும் அங்குள்ள 2, 3 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். கொள்ளையர்களை பிடிக்கும் பணியில், நாமக்கல் மாவட்ட போலீசார் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். இவ்வாறு ராஜேஸ் கண்ணன் கூறினார்.

Read Entire Article