சென்னை: சென்னை விமான நிலையம் அருகே லேசர் மற்றும் பலூன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்களின் மீது கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் இரவு நேரங்களில் லேசர் லைட் அடித்து விமான சேவைக்கு இடையூறு அளித்து வருகின்றனர். குறிப்பாக தரையிறங்கும் விமானங்களின் மீது தொடர்ச்சியாக லேசர் லைட் அடிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 வாரங்களில் விமானங்களின் மீது 3 முறை லேசர் ஒளி அடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை விமான நிலையம் அருகே லேசர் மற்றும் பலூன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை விமான நிலைய நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியதாவது; சென்னை விமான நிலையம் சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் ஒளிகள், வெப்பக் காற்றுப் பலூன்கள் மற்றும் பிற ஒளி வெளியிடும் அல்லது பறக்கும் வகையான பொருட்களும் விமானப் பாதுகாப்புக்கு பெரும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, விமானம் தரையிறங்கும் நேரத்தில், விமானியின் பார்வையை பாதித்து, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். வீடுகள், தெருக்கள், கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள், விருந்துக் கூடங்கள் போன்ற இடங்களில் இத்தகைய பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
வான்வழிப் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், விமான நிலையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 சட்டங்களின் கீழ் இது குற்றச்செயலாக கருதப்படும். இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை நீங்கள் காண நேர்ந்தால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். வான்வழிப் போக்குவரத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post விமான நிலையம் அருகே பலூன், லேசர் ஒளியை பயன்படுத்தாதீர்: சென்னை விமான நிலையம் வேண்டுகோள் appeared first on Dinakaran.