விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த போது உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிதியுதவி: எம்எல்ஏக்கள் வழங்கினர்

3 months ago 20

திருவொற்றியூர்: திருவொற்றியூர் ஆர்.எம்.வி.நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (34), சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் 3 வயது மகன் வேதின் ஆகியோருடன் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க கார்த்திகேயன் மெரினா கடற்கரைக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனைக்கு பின் கார்த்திகேயன் உடல் நேற்று குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டில் அஞ்சலிக்காக கார்த்திகேயன் உடல் வைக்கப்பட்டது. இந்நிலையில் திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் கார்த்திகேயன் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.50,000 நிவாரண உதவியை வழங்கினார். தொடர்ந்து மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு கார்த்திகேயன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கொருக்குப்பேட்டை அனந்தநாயகி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஜான் (56). இவர் தனது மனைவி எலிசம்மா மற்றும் தம்பி ஷாம்குமார் ஆகியோருடன் நேற்று முன்தினம் மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். தகவலறிந்த ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர், கொருக்குப்பேட்டை ஆனந்தநாயகி நகரில் உள்ள ஜான் வீட்டுக்குச் சென்று, உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து இறந்த ஜானின் மனைவி எலிசம்மாவிடம் ரூ.1 லட்சம் வழங்கி ஆறுதல் கூறினார்.
நிகழ்வின்போது ஆர்கே நகர் பகுதிச் செயலாளர்கள் ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொன் இளவரசன் மற்றும் திமுகவினர் இருந்தனர்.

 

The post விமான சாகச நிகழ்ச்சிக்கு வந்த போது உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிதியுதவி: எம்எல்ஏக்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article