விபத்துக்குள்ளான காரின் அசல் ஆவணங்களை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் போக்குவரத்து எஸ்ஐ, தலைமை காவலர் கைது

2 months ago 11

சென்னை: சென்னை ஆவடி சாலையில் விபத்துக்குள்ளான காரின் ஆர்.சி.புத்தகம் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை திரும்பி தர ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற அண்ணாநகர் போக்குவரத்து புலானாய்வு பிரிவு எஸ்ஐ மற்றும் தலைமை காவலரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொறிவைத்து கைது செய்தனர். சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில், கால் டாக்சி டிரைவர் வின்சென்ட் செல்வகுமார் என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கார், ஆவடி சாலையில் பெண் ஓட்டி வந்த மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த பெண் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலான்ய்வு பிரிவு, தனது மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவின் கீழ் 281, 125(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. மேலும், தனது ஓரிஜினல் ஓட்டுநர் உரிமம் மற்றும் காரின் ஆர்.சி.புத்தகத்தை பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே தனது வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் லட்சுமணப்பெருமாள் மற்றும் தலைமை காவலர் விஜயபாஸ்கர் ஆகியோரிடம் கேட்டேன். ஆதற்கு அவர்கள் ஆவணங்களை திரும்ப கொடுக்க வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். விபத்தில் எந்தவித சேதங்களும் இல்லாத நிலையில், எதிர் தரப்பு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சமாதானமாக சென்ற பிறகு எனது அசல் ஆவணங்களை திரும்ப கொடுக்க விரும்பவில்லை. எனவே அரசு பணியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் கேட்கும் காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்பு போலீசார் கால் டாக்சி டிரைவர் வின்சென்ட் செல்வகுமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்து, லஞ்சம் கேட்ட அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரிடம் கொடுக்கும் படி கூறினர். அதன்படி நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியப்படி கால் டாக்சி டிரைவர் வின்சென்ட் செல்வகுமார் ரசாயனம் தடவிய பணத்தை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் லட்சுமணப்பெருமாள் மற்றும் தலைமை காவலர் விஜயபாஸ்ர் ஆகியோரிடம் கொடுக்கும் போது, அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post விபத்துக்குள்ளான காரின் அசல் ஆவணங்களை வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் போக்குவரத்து எஸ்ஐ, தலைமை காவலர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article