விபத்துகளை தடுக்கும் வகையில் மஞ்சூர் பள்ளிமனை பிரிவு பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

4 weeks ago 4

 

மஞ்சூர், டிச.16: விபத்துகளை தடுக்கும் வகையில் மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் பள்ளிமனை பிரிவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் மேல்பஜாரில் இருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் கடைகள், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளது. மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை, அப்பர்பவானி, பிக்கட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளதால் எந்த நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுதியாக காணப்படும்.

மேலும் மேல் பஜாரில் இருந்து ஐயப்பன் கோயில் வரை சாலையின் ஒருபுறம் மணிக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.  இந்நிலையில் இச்சாலையில் இயக்கப்படும் வாகனங்கள் பெரும்பாலும் அதிவேகத்தில் இயக்கப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக காலை நேரத்தில் மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவும், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவிகள் சாலையை கடக்க பெரிதும் சிரமப்பட வேண்டியுள்ளது. இதேபோல் அதிவேக வாகனங்களால் பொதுமக்களும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.  இதையடுத்து மேல் பஜாரில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் பள்ளிமனை பிரிவு அருகே வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

The post விபத்துகளை தடுக்கும் வகையில் மஞ்சூர் பள்ளிமனை பிரிவு பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article