விபத்து நஷ்டஈடு வழங்காததால் ஒன்றிய அரசின் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி

1 month ago 8

விழுப்புரம், அக். 4: விழுப்புரம் அருகே வாணியம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (65). இவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி விழுப்புரத்திலிருந்து தனியார் பேருந்து மூலம் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். வாணியம்பாளையத்தில் இறங்கும்போது திடீரென்று பேருந்து புறப்பட்டதால் சுப்ரமணி கீழே விழுந்து இடுப்பு, கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே விபத்து நஷ்டஈடு வழங்கக்கோரி விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் எண்-2ல் வழக்கு தொடர்ந்தார்.

தொடர்ந்து கடந்த 2022 ஆகஸ்ட் 29ம் தேதியன்று தீர்ப்பளித்த நீதிபதி திருமணி, தனியார் பேருந்தின் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனமான ஒன்றிய நிதி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட சுப்ரமணிக்கு விபத்து நஷ்டஈடு நிவாரணமாக ரூ.1,44,613 வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து நஷ்டஈடு வழங்காததால் கட்டளை நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த தற்போதைய நீதிபதி வெங்கடேசன் வட்டியுடன் சேர்த்து ரூ.2,17,215 வழங்கிட வேண்டும் எனவும், இல்லையென்றால் விழுப்புரத்தில் உள்ள யுனைடெட் இந்தியா இன்ஸ்சூரன்ஸ் நிறுவன பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நஷ்டஈடு வழங்காததால் நேற்று வழக்கறிஞர் வேலவன், நீதிமன்ற ஊழியர் பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள கம்ப்யூட்டர், டேபிள் உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே இழப்பீடு வழங்க இன்ஸ்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகள் காலஅவகாசம் கேட்டனர். இதையடுத்து 2 நாள் அவகாசம் வழங்கப்பட்டதுடன், ஜப்தி செய்த பொருட்களை மீண்டும் இன்சூரன்ஸ் அலுவலகத்திலேயே நீதிமன்ற ஊழியர்கள் வைத்து விட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post விபத்து நஷ்டஈடு வழங்காததால் ஒன்றிய அரசின் இன்சூரன்ஸ் நிறுவன பொருட்கள் ஜப்தி appeared first on Dinakaran.

Read Entire Article