விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி

1 month ago 11

திருச்சி, அக்.1: விபத்து வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான 2 பஸ்களை, திருச்சி மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை கோர்ட் நீதிபதியின் உத்தரவின் பேரில் கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.

சென்னை அரும்பாக்கம் அண்ணா அவென்யூ பாஞ்சாலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் கற்பகம் (50) மற்றும் அப்துல் வஹாப் (47). இவர்களுடன், அதே பகுதியை சேர்ந்த மேலும் சிலர், தென்காசியில் நடக்கவிருந்த உறவினர் திருமணத்துக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து காரில், கடந்த 24.6.2010 அன்று சென்று கொண்டிருந்தனர். கார் திருச்சி-மதுரை சாலையில் கொட்டாம்பட்டி பிரிவு சாலை அருகே வரும்போது, மதுரை-திருச்சி மார்க்கத்தில் வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதையடுத்து காயமடைந்தோர் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி கற்பகம் இறந்தார். அப்துல் வஹாப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இவ்வழக்கில் கடந்த 21.12.21ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கற்பகத்துக்கு ₹39 லட்சத்து 35 ஆயிரத்து 800ம், அப்துல் வஹாப்புக்கு 3 லட்சத்து 88 ஆயிரத்து 100ம் அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் இழப்பீடு வழங்க வேண்டு்ம் என அப்போதைய மாவட்ட சிறப்பு மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை கோர்ட் நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு போக்குவரத்துக்கழக நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்காததை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட சிறப்பு மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த தற்போதைய மாவட்ட சிறப்பு மோட்டார் வாகன இழப்பீடு கோருரிமை கோர்ட் நீதிபதி நந்தினி, உரிய இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான 2 பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் கோர்ட் ஊழியர்கள், திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த 2 அரசு பஸ்களை ஜப்தி செய்து நேற்று கோர்ட் வளாகத்தில் நிறுத்தினர்.

The post விபத்து இழப்பீடு வழங்காத 2 அரசு பேருந்துகள் ஜப்தி appeared first on Dinakaran.

Read Entire Article