விபத்தில் சிக்கி பலி வழக்கில் திருப்பம்: பாஜ நிர்வாகி அடித்து கொலை: 2 பேரை பிடித்து தனிப்படை விசாரணை

2 months ago 10

கே.வி.குப்பம், டிச.19: கே.வி.குப்பம் அருகே விபத்தில் பலியானதாக கூறப்படும் பாஜக நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்டதாக 2 பேரை பிடித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த – நாகல் பகுதியை சேர்ந்தவர் விட்டல்குமார்(42), பாஜ ஆன்மிக பிரிவு மாவட்ட செயலாளர். இவரது மனைவி ரேவதி (39). இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

ரேவதி தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். கடந்த 16ம் தேதியன்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மனைவி ரேவதியை விட்டல் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று வீட்டில் விட்டுள்ளார். பின்னர் சென்னங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே ரத்தக்காயத்துடன் மயங்கி கிடந்த விட்டல் குமாரை கே.வி.குப்பம் போலீசார் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல்விஷாரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அன்று நள்ளிரவு இறந்தார். இதுகுறித்து சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து, அந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர். அதில் விட்டல் குமார் காயமடைந்த போது இருச்சக்கர வாகனத்தில் சென்ற இருவரை போலீசார் தேடும் பணியை தொடங்கி உள்ளனர். தொடர்ந்து, இந்த வழக்கை அடித்து கொலை செய்யப்பட்ட வழக்காக நேற்று மாற்றப்பட்டது. வேலூர் எஸ்பி மதிவாணன் உத்தரவின்பேரில் குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்படை போலீசார், நேற்று 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தில் சிக்கி பலி வழக்கில் திருப்பம்: பாஜ நிர்வாகி அடித்து கொலை: 2 பேரை பிடித்து தனிப்படை விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article