விதியை மீறி விற்ற வீரிய ரக காய்கறி விதைகளுக்கு தடை

1 month ago 11

 

ஈரோடு,அக்.4: விதியை மீறி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வீரிய ரக காய்கறி விதைகள் விற்பனைக்கு விதை ஆய்வு துணை இயக்குனர் தடை விதித்து நடவடிக்கை மேற்கொண்டார். விதைச் சட்டம் 1966 இன் படி தாவர மூலங்கள் உற்பத்தி செய்யவும்,விற்பனை செய்யவும் விதை உரிமம் பெறுவது கட்டாயமாகும். விதை உரிமம் பெறாமல் விதை உற்பத்தி, வினியோகம், விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். மேலும், விதை உரிமம் பெற்றவர்கள் இச்சட்டத்தின் கீழ் எந்த ஒரு விதி மீறலும் இல்லாமல் விற்பனை செய்வது அவசியம்.

இந்த நிலையில்,ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி தலைமையிலான ஈரோடு, தாராபுரம், பவானி மற்றும் சத்தியமங்கலம் விதை ஆய்வாளர்கள் குழு, ஈரோடு பகுதியில் கடந்த 30ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதி மீறல் காணப்பட்ட வீரியரக காய்கறி விதை குவியல்களுக்கு விதை விற்பனை தடை விதிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ. 45 ஆயிரம் ஆகும்.

இதுகுறித்து விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி கூறுகையில், “விதை விநியோகஸ்தர்கள், விதை உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்கள் மட்டுமே விதை வினியோகம் செய்ய வேண்டும்.மேலும் விதை ரகங்கள் பதிவு சான்று பெறப்பட்டுள்ளதா ? அல்லது பதிவு சான்று காலாவதி ஆகாமல் உள்ளதா ? என்பதை உறுதி செய்த பின்னரே விதை விநியோகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு விதை குவியல்களுக்கும் முளைப்பு திறன் அறிக்கை பெற்று இருக்க வேண்டும்” என்றார்.

The post விதியை மீறி விற்ற வீரிய ரக காய்கறி விதைகளுக்கு தடை appeared first on Dinakaran.

Read Entire Article