விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!!

20 hours ago 2

வாஷிங்டன் : விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் குறித்து நாசா புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 10 நாள் பயணமாக சென்றனர். இதனிடையே, விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே தங்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அவர்களை மீட்க தொடர் முயற்சிகள் எடுத்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், 9 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் பூமிக்கு திரும்ப உள்ளதாக நாசா அண்மையில் தெரிவித்தது.

எலான் மஸ்கிற்கு சொந்தமான, ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தின் மூலம் மார்ச் 16ல் அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தெரிவித்து இருந்தது. ஆனால் இதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் – டிராகன் – க்ரூ10 திட்டத்தின் கீழ் புளோரிடாவில் டிராகன் விண்கலத்துடன் சீறி பாய தயாராக இருந்த பால்கன் 9 ராக்கெட்டில், கடைசி நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.18 மணிக்கு டிராகன் விண்கலத்தை ஏவ இருந்த நிலையில் கடைசி நிமிடம் ஏற்பட்ட கோளாறால் ஒத்திவைக்கப்பட்டது.ராக்கெட் ஏவுதளத்தில் இருந்த ஹைட்ராலிக் இயந்திரத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நாசா, தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டால் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.56 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வாய்ப்பு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.

The post விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article