விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்கள்; கோவையில் ரெயில், பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல்

1 week ago 4

கோவை,

தீபாவளி பண்டிகை கடந்த 31-ந்தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளியை தொடர்ந்து அரசு விடுமுறை, வார இறுதி நாட்கள் உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்கள் விடுமுறையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.

விடுமுறை முடிந்து நாளை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் தொடங்க உள்ளதால், சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் பெரும்பாலும் ரெயில் சேவை மற்றும் பேருந்து சேவையை பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டதில் இன்று சாலைகளில் வழக்கத்தை விட அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. கோவை ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகையை தங்கள் சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு கடந்த 2 தினங்களாக கோவைக்கு திரும்பி வருகின்றனர்.

அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலர் கோவையில் தங்கி படித்து வரும் நிலையில், அவர்கள் தற்போது கோவையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் கோவை உக்கடம் பேருந்து நிலையம், காந்திபுரம் பேருந்து நிலையங்களிலும் அதிக அளவிலான கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இன்று நள்ளிரவு வரை கோவையில் உள்ள ரெயில், பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்படும் எனவும், அதன்பிறகு படிப்படியாக கூட்டம் குறையத் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article