'விடுதலை 2' படம் குறித்த அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டுக்கு பி.சி.ஸ்ரீராம் பதில்

6 months ago 18

சென்னை,

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'விடுதலை'. இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகம் உருவாகியுள்ளது. விடுதலை 2 படத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோருடன் இணைந்து பிரகாஷ்ராஜ், சேத்தன், மூணார் ரமேஷ், பவானிஶ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், மஞ்சுவாரியர், கிஷோர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'விடுதலை 2' திரைப்படம் கடந்த 20ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மக்களுக்காக போராடிய, ஆனாலும் மக்களுக்கே தெரியாத, தலைவர்கள் குறித்து இப்படம் பேசியுள்ளது.

விடுதலை 2 படக்குழுவினர் நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தி இருப்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது, "நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா" பாய வேண்டும். முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் மீது ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீது தேசிய புலனாய்வு முகமை கவனம் செலுத்த வேண்டும். காவல்துறையின் விசாரணை காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கவுரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குனர். திரையரங்கை பிரச்சார மேடையாக மாற்றி... தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார். பெருமாளின் பயங்கரவாதத்தினால் அம்மாவட்டங்கள் அடைந்த பின்னடைவு ஏராளம். பாரதத்தின் அடுத்த ரெட் காரிடாராக தமிழகத்தை மாற்ற துடிக்கும் சக்திகளை... தி.மு.க. ஊக்குவிப்பது அம்பலமாகிறது. நக்சல்வாதத்தின் கொடுமைகளை கிழக்கு மாநிலங்களின் அவல நிலையை கண்டு தமிழகம் பாடம் கற்கட்டும்.

சாலைகள் போடுவதை எதிர்த்து போராடும் அனைவரும் அயோக்கியர்களே... திரையரங்கில் கைதட்டி விசிலடித்து இத்திரைப்படத்தை கொண்டாடும் அனைத்து இளைஞர்களும், நக்சல் வாதத்தினால் பின்னடைவை சந்தித்த மாநிலங்களை ஒரு முறை சுற்றி பார்க்க வேண்டும். இன்று தமிழகத்தில் தினக்கூலிகளாக பணியாற்ற இடம் பெயர்ந்தவர்கள் அனைவரும் நக்சல்வாதத்தினால் பாதிக்கப்பட்ட மாநிலங்களை சார்ந்தவர்கள் தான். அவர்களிடம் நீங்கள் பேசும் புரட்சியை கூறி பாருங்கள்... வாயில் மட்டுமல்ல எல்லாவற்றின் மூலமாகவும் உங்களைப் பார்த்து சிரிப்பார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

அர்ஜுன் சம்பத்தின் அந்தப் பதிவை பகிர்ந்து கருத்துப் பதிவிட்டுள்ள ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம், "நம்முடைய கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால நிலையையும் எடுத்துச் சொல்லும் கிளாஸிக் திரைப்படம்தான் 'விடுதலை 2'. தயவுசெய்து ஒரு படத்தை கலை வடிவமாகப் பாருங்கள்" என்று பதிலடி தந்துள்ளார்.

#VidudalaPart2 Speaking & portrayal of truth does make us less Indians.Please be thankful for we are more Indians & can speak the truth to our people without fear.@Dir_Vetrimaaran @VijaySethuOffl @DirRajivMenon @ManjuWarrier4 https://t.co/cswTbF4z8e

— pcsreeramISC (@pcsreeram) December 23, 2024

படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 24 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . ஆனால் இன்னமும் படத்தின் வசூல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடவில்லை.

Read Entire Article