உலகில் விடாமுயற்சியின் இடத்தை வேறு எதுவும் தன்னுடையதாக்கிக் கொள்ள முடியாது. விடாமுயற்சிக்கும், தொடர் முயற்சிக்கும் ஏன் அத்தனை முக்கியத்துவம்? காரணம் முயற்சியின் மூலமாகவே எல்லாம் அடைய முடிகிறது.முயற்சியுள்ளவர் தொடர்ந்து செயல்படுகிறார். வெற்றி பெறுகிறார். முயற்சியை பாதியில் கைவிடுகிறவர் தோற்றுப் போகிறார். இது வெற்றிக்கான சூத்திரம்.எளிதாய் தெரிகிறது அல்லவா?சுரங்கம் தோண்டிய ஒருவர் அது ஆக்க வளமற்ற சுரங்கம் என்று கருதி தம்முடைய முயற்சியைக் கைவிட்டார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே இடத்தில் சுரங்கம் தோண்டிய மற்றொருவர் உலோகத் தாதுக் குவியலைக் கண்டார்.அடுத்த அடியில், அடுத்த நொடியில் வெற்றி காத்திருக்கும்.அதை அறியாமல் நம்பிக்கையற்றவரும்,ஊக்கம் இழந்தவரும் தங்கள் முயற்சியைக் கைவிட்டு விடுகிறார்கள்.ஒரு அறிஞர் தான் போகிற வழியில், ஒருவன் சம்மட்டியால் அடித்துப் பெரிய பாறையைப் பிளப்பதைக் கண்டார். அந்தப் பாறை பிளக்கப்படுகிற வரை அவர் அங்கேயே நின்று இருந்தார். அந்த மனிதன் பலமுறை சம்மட்டியால் அடித்துக்கொண்டிருந்தார். கடைசியில் பாறை இரண்டாக உடைந்தது. அவன் சம்மட்டியை சில நூறு முறை பயன்படுத்தியிருப்பார்.100 அடிகளில் எந்த அடியில் பாறை உடைந்தது? கடைசி அடியில் என்றுதான் நமக்கு சொல்லத் தோன்றும். ‘தொடர்ந்து விழுந்தன பல அடிகள்’ என்று தமக்குள் சொல்லிக்கொண்டு நடந்தார் அறிஞர். தொடர் முயற்சியே சாதனைகளை நிகழ்த்துகிறது. இதற்கு உதாரணமாய் இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.
நிவேதா சென்னையில் பிறந்து, பெற்றோரின் வேலையின் காரணமாககர்நாடக மாநிலத்தில் குடியேறினார். பெங்களூரு ஆர்.வி பொறியியல் கல்லூரியில் வேதி பொறியியல் படிப்பைப் படித்து வந்தார். கல்லூரிக்குச் சென்று வரும் பாதையில் எரிந்து கொண்டிருக்கும் குப்பைகளை கண்டார். புகை நாற்றத்திற்குப் பயந்து தன் வீட்டு ஜன்னல்களையும் அடைத்தே வைத்தார். சன்னலில் சன்னமாக ஊடுருவி சகலத்தையும் இலகுவாக்கும் காற்றின் அனுபவம், மரங்கள் சூடிய இலைகளை, இலைகளைச் சூடிய பறவையைப் பார்க்கும் ஆர்வம் அத்தெருவில் எவருக்கும் இல்லை.நிவேதா அரசு அதிகாரியிடம் பேசினார். நண்பர்களிடம் கலந்துரையாடினார். எல்லோரும் இணைந்தார்கள். வீதியைச் சுத்தம் செய்தார்கள். ஆனால் குப்பைகள் மீண்டும், மீண்டும் சேர்ந்தது.குப்பைகளால் நிறைந்தது வீதி. நிவேதா குப்பையை பற்றிய தகவல்களை இணையத்தில் தேட ஆரம்பித்தார்.இந்தியாவில் ஒரு நாள் குப்பை 2லட்சம் டன். இந்தியா முழுவதும் 40 லட்சம் தொழிலாளர்கள் கழிவுகளைப் பிரிக்கிறார்கள். அதிகபட்சம் ஐந்து விழுக்காடு மட்டுமே பிரிக்க முடிகிறது. மலை போல் கொட்டிக்கிடக்கும் மீதம் உள்ள குப்பைகள் எரியூட்டப்பட்டு 24 மணி நேரமும் எரிந்துகொண்டே இருக்கிறது.
குப்பைகளின் உலகை அறிய தொடங்கிய நிவேதா, குப்பைகளை நெகிழி பையில் கட்டி மக்கள் போடுவதைக் கண்டார். அதில் உள்ள கண்ணாடி,முடி,தாள் காய்கறி, கடையில் வாங்கிய சாம்பார் பை, சானிடரி நாப்கின், வயதானவர்களின் கழிவு, காயத்தைத் துடைத்த பஞ்சு, செத்த எலி, ஆணி,கெட்டுப்போன உணவு இப்படி பலவும் இருப்பதை பிரித்துப் பார்த்தார்.அருவருப்புடன் விரல்நுனியில் பிடித்து நாம் தூக்கிப் போடும் குப்பைபைகளை பாதுகாப்பற்ற நிலையில் மனிதர்களே பிரிக்கிறார்கள். உலகில் அதற்கான கருவி இல்லையே என்று மனம் வருந்தினார்.கருவி கண்டுபிடிக்க விரும்பி நிவேதா, கழிவு மேலாண்மையில் பல ஆண்டுகளாகப் பணிபுரியும் அதிகாரிகளை சந்தித்தார்.‘‘வேண்டாத வேலை இது”என்று அவர்கள் முகம் சுளித்தார்கள். ஆனால் ‘‘முயன்று பார்”என பேராசிரியர்கள் அனுமதி கொடுத்தார்கள்.நகராட்சி குப்பைக் கிடங்கிற்குச் சென்ற நிவேதா ஏறக்குறைய ஏழு மாதங்களாக குப்பையைக் கிளறினார். எண்ணற்ற பைகளை அவிழ்த்து ஆராய்ந்தார். அவருடைய நண்பர்கள் குப்பை பொறுக்கி என்றார்கள். இன்னும் சிலர் குப்பை பைத்தியம் என்று சொல்லி சிரித்தார்கள். அவமானப்படுத்தி பலரும் ரசித்தார்கள்.நான் செய்யவில்லை என்றால் வேறு யார் செய்வது? என்று சொல்லிவிட்டு நிவேதா தொடர்ந்து உழைத்தார்.
மட்கும் குப்பை, மட்காத குப்பை எனப் பிரிக்கும் ஒரு இயந்திரத்தின் வரைபடத்தை கணினியில் உருவாக்கினார்.இந்த நிலையில் கல்லூரி தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வில் வெற்றி பெற்ற நிவேதாவிற்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையும்உறுதியானது. வேலைக்கு செல்வதாகவும் சில ஆண்டுகள் கழித்து ஆய்வு தொடர்வதாகவும் அம்மாவிடம் கூறினார் நிவேதா.கண்ணுக்கு முன்னே ஆபத்திருக்கிறது, மக்களை காப்பாற்றும் வழி உனக்கு தெரிகிறது. தொடர்ந்து செல், நீ செய்யவில்லை என்றால் வேறு யாரு செய்வது? என அம்மா உற்சாகம் கொடுத்தார்.ஆய்வினைத் தொடர்ந்த நிவேதா, பலதரப்பட்ட குப்பைகளைப் பிரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து ட்ராஸ்கான் என்ற நிறுவனத்தைப்பதிவு செய்தார்.கர்நாடக அரசு ஒவ்வொரு ஆண்டும் ‘‘எலிவேட் 100”என்ற நிகழ்ச்சி நடத்தி, 100 புதிய கண்டுபிடிப்பு முயிற்சிகளுக்கு பரிசளிப்பது வழக்கம். 2017 ஆம் ஆண்டு ட்ராஸ்கேன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.50 லட்சம் உதவித் தொகையும் கிடைத்தது.
ஐந்து சிறப்பான தொடக்கநிலை கண்டுபிடிப்புகளில் ஒன்று என்னும் விருதினை செப்டம்பர் மாதம் இஸ்ரேல் தூதரகம் ட்ராஸ்கேனுக்கு வழங்கிகௌரவப்படுத்தியது.குப்பைகளை பிரிக்கவே முடியாது என்று சொன்னவர்களுக்கு செய்து காட்டி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்பி அழைப்பு விடுத்தார் நிவேதா. வந்தவர்களில் ஒருவர் குப்பையை உள்ளே போட்டார். ஐந்து விநாடிகளில் இயந்திரம் உடைத்தது. தெரிந்தோ தெரியாமலோ குப்பையுடன் சேர்ந்து ஒரு பெரிய கல் ஒன்றை ஒருவர்போட்டார்.இதைப் புரிந்து கொண்ட நிவேதா இயந்திரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்தார். உலகில் முதல் முற்றிலும் தானியங்கி பலதரப்பட்ட கழிவுகளை பிரிக்கும் ட்ராஸ்போட் இயந்திரம் உருவானது.
ட்ராஸ்போட் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகளை தனித்தனியாக பிரிப்பதுடன் மறுசுழற்சி முறையில் மட்கும் குப்பைகளை இயற்கை எரிவாயுமற்றும் உரமாக மாற்றித் தருகிறது. மட்காத குப்பைகள் நாற்காலி,பலகை, மேசை போன்ற பல்வேறு பொருட்கள் செய்ய பயன்படுகிறது. உலகில் மிக முக்கியமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்க்க முயலும் புதுமையான கண்டுபிடிப்புக்கான ‘‘சிஸ்கோ விருது” 2019 ஆம் ஆண்டு நிவேதாவின் நிறுவனமான ட்ராஸ்கானுக்கு கிடைத்தது. நிவேதா தொடர்ந்து முயலும்போது அவரை சுற்றி இருப்பவர்கள் வீண் முயற்சி என்று சொல்லி அவரை ஏளனம் செய்தார்கள்.ஆனால் நிவேதாவின் தொடர் வெற்றியைப் பார்த்து அதே நண்பர்கள் விடாமுயற்சி என்று சொல்லி வாழ்த்துகிறார்கள்.நிவேதா தனது கல்வியால் பெற்ற அறிவையும் திறமையும் சரியாக பயன்படுத்தி சமூகப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தி சாதித்து வரும் சாதனை மங்கை என்பதில் ஐயமில்லை.
The post விடாமல் முயலுங்கள்!தொடர்ந்து வெல்லுங்கள்! appeared first on Dinakaran.