
சென்னை,
மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, 'சூப்பர் சரண்யா' என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் மமிதா பைஜு. இவரது நடிப்பில் வெளியான 'பிரேமலு' படம் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. 'பிரேமலு' படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார் மமிதா பைஜு. இப்படத்தை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அதன்படி, மமிதா பைஜு தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'ரெபல்' படத்தில் நடித்து அறிமுகமானார். இவர் தற்போது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திலும் நடித்து வருகிறார். தென் இந்திய திரையுலகில் மளமளவென முன்னேறி வரும் மமிதா பைஜு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தினை நிறைவு செய்த பின்னர், இந்த புதிய படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக இருந்த கீர்த்தீஸ்வரன் , இந்த புதிய படத்தினை இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை தரும் இளம் நடிகரான பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு இப்படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
