சென்னை,
தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பார்வதி நாயர், சமீபத்தில் வெளியான விஜய்யின் 'தி கோட்' படத்திலும் நடித்திருந்தார்.
உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு ரேபிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு சென்னை அண்ணா நகரில் உள்ள பூங்காவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைக்கலைஞர்கள் பார்வதி நாயர், சந்தோஷ், ஐஸ்வர்யா பாஸ்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் சாலையோரங்களில் மீட்கப்பட்ட நாய்களை பார்வதி நாயர் மற்றும் சில பிரபலங்கள் தத்தெடுத்தனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை பார்வதி நாயர், கடந்தாண்டு ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நாய், பூனை போன்ற விலங்களுக்கு மக்கள் அனைவரும் உதவி செய்ய வேண்டும். தெரு நாயிடம் நாம் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறோம். அதை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தீபாவளி நாட்களில் பட்டாசு வெடிக்க கூடாது என்று சொல்ல முடியாது. ஆனால் விலங்கு நல ஆர்வலரானதால் நான் பட்டாசுகள் வெடிப்பதில்லை. பட்டாசு வெடிப்பதால் நாய்கள் பயப்படுகின்றன மாசுபாடும் ஏற்படுகிறது அதனால் நான் வெடிப்பதில்லை, என்றார்.
விஜய்யின் அரசியல் தொடர்பான கேள்விக்கு, விஜய் மிகச் சிறந்த நடிகர். எனக்கு மிகவும் பிடித்த மனிதர். கோட் திரைப்படத்தில் அவருடம் பணியாற்றியது ஒரு சிறந்த அனுபவம். அரசியலில் செயல்படும் திறன் அவருக்கு உள்ளது. அரசியல் குறித்து தற்போது நான் யோசிக்கவில்லை. வாழ்க்கையிலேயே இவ்வளவு அரசியல் நடந்து கொண்டிருக்கும்போது, அந்த அரசியல் மிகவும் அழுத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில் அது குறித்து யோசிக்கலாம் என்று கூறினார்.