கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் தவெக நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலில், கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. 7 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கிருஷ்ணகிரி நகர செயலாளரான ராஜாஜி நகரை சேர்ந்த சசிக்குமார் (35) தலைமையில் நேற்று கிருஷ்ணகிரி நகர பகுதிகளில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை நடத்தினர். தொடர்ந்து கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த தவெக உறுப்பினர் சலீம் (31) ஏற்பாட்டின்பேரில், கீழ்புதூரில் தவெக கிளை உருவாக்கப்பட்டு கொடிக்கம்பம் நடப்பட்டது. இதையடுத்து, சசிக்குமார் மற்றும் சலீம் உள்ளிட்டோர் 2 கார்களில் கீழ்புதூர் கிராமத்திற்கு சென்றனர். அங்கு, கொடியேற்றி வைத்து மரக்கன்றுகளை நட முயன்றனர்.
அப்போது, அங்கு கீழ்புதூரை சேர்ந்த விஜய் (எ) நாகராஜ்(31) வந்தார். அவர், ‘நான் இந்த பகுதி கிளை தலைவராக இருக்கிறேன். நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் என்னிடம் நீங்கள் முன்பே கூறி இருக்க வேண்டும்’ என்று கூறினார். இதுதொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்து கிருஷ்ணகிரி புதிய பாஞ்சாலியூரைச் சேர்ந்த தபு (எ) தப்ரீஷ்(26) என்பவர் 10 பேருடன் அங்கு வந்தார். தொடர்ந்து விஜய்(எ) நாகராஜை பார்த்து, எங்களை கேள்வி கேட்பதற்கு நீ யாருடா, நாங்கள் அப்படித்தான் செய்வோம்’ என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், தான் எடுத்து வந்த பட்டா கத்தியை சுழற்றியவாறு விஜய் தரப்பினரை வெட்டியுள்ளார். இதில், கீழ்புதூர் பார்த்திபன்(28), முருகேசன்(35) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து கீழ்புதூர் இளைஞர்கள் தபு தரப்பினர் வைத்திருந்த ஆயுதத்தை பறித்து திருப்பி தாக்கியுள்ளனர்.
இதில் தபு மற்றும் உடன் வந்த கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் அருண்(26), ஹரிராம்(22), பாரதியார் நகர் சஞ்சய்(22) ஆகியோர் காயமடைந்தனர். இதனால், அந்த பகுதியில் களேபரம் ஏற்பட்டது. இதையடுத்து, இரு தரப்பைச் சேர்ந்த 7 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இந்த தகராறில் சலீம் வந்த கார் கண்ணாடிகளை சிலர் உடைத்து நொறுக்கினர். இதுகுறித்து தாலுகா போலீசார், பார்த்திபன் கொடுத்த புகாரின்பேரில் தபு, அருண், சஞ்சய், அரிராம், விக்னேஷ்(22), சலீம்(31) ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து விக்னேஷை கைது செய்தனர். இதேபோல், அருண் கொடுத்த புகாரின்பேரில், விஜய்(39), முனி(49), வெங்கடேஷ்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தபு உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். பட்டா கத்தியால் தவெகவினர் வெட்டிக்கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
The post விஜய் பிறந்தநாள் விழாவில் பரபரப்பு; தவெக நிர்வாகிகள் பட்டா கத்தியுடன் மோதல்: கார் கண்னாடி உடைப்பு appeared first on Dinakaran.