சென்னை,
பா.ஜ.க.வின் இந்துத்துவா மாடலை எதிர்த்து, தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்திய தேர்தல் வெற்றிகளை விஜய் கொச்சைப்படுத்தியுள்ளார் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு பயணித்த திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த கலை(35), வழக்கறிஞர் சீனிவாசன் சென்னை, பாரிமுனை செம்பு சாஸ்த் தெருவை சேர்ந்த வசந்த குமார், ரியாஸ் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். நால்வருக்கும் மாநில செயற்குழு சார்பில் இரங்கலையும் இவர்களின் பிரிவால் துயருற்றுள்ள பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைந்திட விழைகின்றோம்.
புதிதாக அரசியல் கட்சியை தொடங்குபவர்கள் அனைவரும், தாங்கள் தொடங்கியுள்ள கட்சி நாட்டு நலனுக்கும், மக்கள் ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்கும் பாடுபடும் என்று தெரிவிப்பார்கள். அதன் தொடர்ச்சியாக மக்கள் நலன் சார்ந்த இயக்கங்களை ஜனநாயக முறையில் மேற்கொள்வார்கள். அரசியல் பாதை என்பது உலகில் இரண்டு பாதைகளைக் கொண்டது. ஒன்று இடதுசாரிப் பாதை, மற்றொன்று வலதுசாரிப் பாதையாகும்.
தமிழகத்தின் சிறந்த திரைப்படக் கலைஞராக வலம் வந்த விஜய், தற்போது அரசியலில் முதல் அடி எடுத்து வைத்துள்ளார். அவர் கடக்க வேண்டிய தூரம் வெகு தூரமாகும். தூரத்தை கடந்திட அவர் எந்தப் பாதையை தேர்ந்தெடுக்க உள்ளார் என்பது குறித்து, அவரது மாநாட்டு உரையில் தெளிவில்லை. பிளவுவாத சக்திகளை எதிர்ப்பதாக கூறுகின்றார். அடுத்த கணம் தி.மு.க.வை குறிவைத்து சம்மட்டியினை கொண்டு அடிக்கின்றார்.
தி.மு.க.வை மட்டுமல்ல, தி.மு.க.வுடன் தோழமை கொண்ட கட்சிகளையும் மறைமுகமாக தனது தாக்குதலை நடத்தியுள்ளார். பா.ஜ.க. பாசிசம் எனில் நீங்கள் என்ன பாயாசமா எனக் கூறியது பாசிச அபாயத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை. எது பேரபாயம்? அரசியல் அமைப்பு சட்டத்தை நிராகரிப்பது, புறம்பாக செயல்படுவது அரசியலமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளை சீர்குலைத்து, தனக்கு உட்பட்ட அமைப்பாகவும், தன் உத்தரவை நிறைவேற்றும் அமைப்பாகவும் மாற்றி, எதிர்கட்சிகளை பழிவாங்குவது, அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுயமாக சிந்திப்பது, பேசுவது, எழுதுவது என்ற ஜனநாயக உரிமையை பறித்து, மாற்று கருத்துடையோரை கொல்வது, கொலை குற்றவாளிகள் ஜாமினில் வந்தபோது அவர்களுக்கு மாலை, பொன்னாடை அணிவித்து வரவேற்பது மதச்சார்பின்மை என்ற மகத்தான கொள்கைக்கு மாறாக மதரீதியாக மக்களை பிளவுபடுத்தி தனது குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றி வருவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு கவர்னரைக் கொண்டு இடையூறு விளைவிப்பது போன்றவைதானே அபாயத்தின் உச்சம் என்பதனை உணர முடியவில்லையா?
சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, சமூக நலத்திட்டங்கள் ஆகியனவற்றை செயல்படுத்துவதில், நிறைவேற்றுவதில் தி.மு.க. எங்கே தவறியுள்ளது என்பது குறித்து கூறினால் அது பரிசீலனைக்குரியது. அவ்வாறு எதுவும் கூறாமல் பா.ஜ.க. கூறும் கருத்தையே இவரும் திருப்பி கூறுவதால் என்ன பயன்? இந்துத்துவ கருத்தியலுக்கு எதிர் நிலையில் தமிழகத்தில் ஆட்சி நடப்பதால்தான் இந்தியாவிலேயே சமூக நலத்திட்டம், சேம நலத்திட்டங்களில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கின்றது.
கல்வி - மருத்துவத்திலும் கூட பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறப்பாகவே உள்ளது. இவைகளையெல்லாம் மிக சாமர்த்தியமாக கடந்து சென்று, பாசிச அபாயத்தை மூடிமறைத்து, பாசிச பா.ஜ.க.வின் பிளவுவாத கொள்கையை எதிர்த்து போராடி வரும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை முனை மழுங்கச் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார். பாசிச பா.ஜ.க.வின் இந்துத்துவா மாடலை எதிர்த்து, தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்திய தேர்தல் வெற்றிகளை கொச்சைப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் விஜய், பாசிச பா.ஜ.க.விற்கு துணை போகின்றாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. தாங்களே அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்து முதல்-அமைச்சர் ஆவேன் என நாற்காலி ஆசையை வெளிப்படுத்தியவர், எங்களோடு சேர வந்தால் சேர்த்துக் கொள்வோம், அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்போம் என்று கூறியிருப்பது அதிகாரத்தில் பங்கு என்ற தேன்தடவும் வேலையாகும்.
இதன் மூலம் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சிதையும் என்ற அவரது எதிர்பார்ப்பு என்பது பாசிச சக்திகள் தமிழகத்தில் கால் ஊன்ற மேற்கொள்ளப்படும் அரசியல் உத்தியாகும். இத்தகைய நயவஞ்சக நரித்தனத்திற்கு தமிழக மக்கள் ஒரு போதும் இறையாக மாட்டார்கள் என்பதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்."
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.