சென்னை,
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் சிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கும் விஜய் தேவரகொண்டாவின் புதிய படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.
இவர் தற்போது ஷியாம் சிங்கா ராய் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த படம் விஜய் தேவரகொண்டாவின் 14-வது படமாகும். இந்த படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளன.
இந்த நிலையில், பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஹாலிவுட்டில் வெளியான 'மம்மி, டார்க் மேன்' போன்ற சீரிஸில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 1850-ம் ஆண்டு காலகட்ட கதைக்களத்தில் உருவாக உள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.